கர்ப்பிணி மனைவியையும், 6 வயது மகளையும் கழுத்தறுத்து கொன்ற கூலித்தொழிலாளி
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் 6 மாத கர்ப்பிணி மனைவி, 6 வயது குழந்தையை கொன்ற நபர், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் மணிகண்டனிடம் கேட்போம்...............
கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மயக்க நிலையில் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, விவிஜி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (45), இவரது மனைவி கல்பனா (42), மகள் சாரதி பாலா (6). தென்காசி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட செல்வ கணேஷ் கடந்த 7 ஆண்டுகளாக வெங்கமேடு பகுதியில், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர் கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் செல்வ கணேஷ் நேற்று நள்ளிரவு 6 மாத கர்ப்பிணையாக இருந்த தனது மனைவி கல்பனா மற்றும் மகள் சாரதி பாலா ஆகிய இருவரையும், கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தானும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார், மயக்க நிலையில் இருந்த செல்வ கணேஷை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும், கல்பனா மற்றும் சாரதிபாலா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே கர்ப்பிணியாக இருந்த மனைவி மற்றும் 6 வயது பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.