காஞ்சிபுரத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், ஏர் ஹாரன் அடித்த தனியார் பேருந்தை மடக்கி, பொது மக்கள் எச்சரிக்கை விடுத்தனர். ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து குறுகலான சாலையில் அதிக ஹாரன் ஒலி எழுப்பிக் கொண்டு வேகமாக வந்ததுள்ளது. திடீரென எழுந்த ஹாரன் சத்தத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து, தடுமாறி விழும் நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள், சிலர் உடனடியாக அந்த பேருந்தை வழி மறித்து நிறுத்தி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஏர் ஹாரனை அடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏர் ஹாரன்களை பயன்படுத்த மாட்டேன் என ஓட்டுனர் தெரிவித்ததால் வாகன ஓட்டிகள் கலைந்து சென்றனர்.