கள்ளக்குறிச்சியில் MLA-வை முற்றுகையிட்டு கேள்விகளால் துளைத்தெடுத்த மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த 144 வீடுகள் இடிக்கப்பட்டதை அடுத்து, ஆறுதல் கூற வந்த சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் நியாயம் கேட்டனர். ஏரி ஆக்கிரமிப்பில் இருந்த 144 வீடுகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் கடந்த சனிக்கிழமை இடிக்கப்பட்டன. இதையடுத்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், வீடுகளை இழந்து வாடும் மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு வந்தார். அவரை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் உடனடியாக அனைவருக்கும் அதே ஊரிலேயே பட்டா வழங்கி, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலமாக வீடு வழங்கப்படும் என்று எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் உத்தரவாதம் அளித்தார். அதுவரை, தற்காலிக கொட்டகை அமைத்து உணவு அளிக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.