``ஆட்டுகால் சூப்-ஐ இனி வாயிலேயே வைக்க மாட்டீர்கள்..''அலறவிடும் `அதர் ஸ்டேட்' ஆடுகள்...
சென்னையில் சமீப நாட்களாக கெட்டுப்போன இறைச்சி விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்
கெட்டுப்போன இறைச்சி வரத்து அதிகரிக்க காரணம் என்ன ...? என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னையில் 900 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கால், ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மாமிசப் பிரியர்களை விழி பிதுங்கச் செய்தது..
இந்நிலையில் லாப நோக்கில் செயல்படும் சில ஹோட்டல்களின் சுயநலமே இது போன்ற சம்பவங்களுக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வெளி மாநில இறைச்சிகளை இடைத்தரகர்கள் மூலமாக சென்னையில் பெற்று உணவு சமைத்து ஹோட்டல்களில் நுகர்வோர்களுக்கு வழங்கி வருவது சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.
உதாரணமாக வட மாநிலங்களில் ஆடு மலிவு விலையில் கிடைக்கும். அதேபோல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா போன்றவற்றில் மாடுகள் குறைவான விலையில் விற்கப்படுவதால் இறைச்சியின் விலையும் குறைவு தான்...
இப்படி ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சிகளை சென்னைக்கு கொண்டு வந்து வெட்டி விற்பனை செய்ய மாநகராட்சியின் ஆடு தொட்டிகளையே அணுக வேண்டும் என்பதால் இறைச்சியை வெட்டிய நிலையில் ஐஸ் பெட்டியில் பதப்படுத்தி ரயில் அல்லது லாரிகள் மூலமாக தமிழகத்திற்கு கிலோ கணக்கில் வெளிமாநில இறைச்சிகள் கொண்டு வரப்படுகின்றன.
சிந்தாதிரிப்பேட்டை, சைதாப்பேட்டை , சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இதற்கென இடைத்தரகர்கள் இருப்பதால் வெளிமாநில இறைச்சிகள் மொத்தமாக ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன .
இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், டன் கணக்கில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன..
சங்கிலி தொடர் போல தொடரும் இச்சம்பவங்களால் மக்கள் அதிர்ந்து போயுள்ள சூழலில், இது போன்ற இடைத்தரகர்களின் டார்கெட் ஓட்டல்கள் மட்டுமே என்பதாகவும், சில்லறை விற்பனையில் இது போன்ற வெளிமாநில இறைச்சிகள் எளிதில் அடையாளம் காணப்படுவதால், பிரச்சனை இல்லை என்கின்றனர் சில்லறை வியாபாரிகள்...
வெளிமாநிலத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் ஆட்டிறைச்சிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை வைத்து தள்ளுவண்டி சூப் கடைகளில் பயன்படுத்தப்படுவதால் எச்சரிக்கையும் அவசியம் என்கின்றனர் விற்பனையாளர்கள் ...
இது ஒரு புறம் இருக்க கெட்டுப்போன இறைச்சிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலுக்கு பல்வேறு விதமான கேடுகள் ஏற்படும் சூழல் இருப்பதாகவும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்...
நாம் உண்ணும் ஒவ்வொன்றும் அபாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் கடைகளில் சாப்பிடுவது அனைத்தும் தரமானது தானா? என்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம்...