`மேவாட்’ கும்பலாக தமிழக குடும்பம்..தேனி பூமிக்குள் தோண்ட தோண்ட தங்கம்-4 வருடத்தில் கோடீஸ்வர வாழ்க்கை
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள், சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான நூற்பாலையை விலைக்கு வாங்கி சிக்கியிருக்கும் பலே சம்பவம் குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
2024 இல் முடிவுக்கு வந்திருக்கும் இந்த பலே கொள்ளையர்களின் கதை 2020இல் தொடங்கியிருக்கிறது...
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில், ஆட்களே இல்லாத ஐந்து வீடுகளில் சுமார் 88 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி தங்களின் கைவரிசையை தொடங்கியிருக்கின்றனர்...
விசாரணையை அப்போதே தீவிரப்படுத்தி தனிப்படை அமைத்து முடுக்கி விட்ட போலீசார், மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த 20 வயது இளைஞர் மூர்த்தி மற்றும் பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சராஜன் ஆகிய இருவரை கைது செய்திருக்கின்றனர்..
இருவரும் ஏற்கனவே கோயம்புத்தூர் போலீசாரால் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்ததில்தான் இந்த திடுக்கிடும் தகவல்கள்...
மூர்த்தி, அம்சராஜன் இருவரும், தங்களின் நண்பர்களான சுரேஷ் மற்றும் அருண்குமார் ஆகியோருடன் இணைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆட்கள் இல்லாத வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்திருக்கின்றனர்..
கொள்ளையடிக்கப்படும் பொருள்கள் அனைத்தும், மூர்த்தியின் மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரிடம் சேகரமாகி வந்திருக்கிறது...
இந்நிலையில் திருடிய பணத்தில்... விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான பழைய நூற்பாலை ஒன்றை கும்பல் வாங்கியிருப்பதை விசாரணையில் அறிந்து அதிர்ந்து போயிருக்கின்றனர் அதிகாரிகள்..
மேலும், முன்னெச்சரிக்கையாக போலீசில் சிக்காமல் இருக்கவும், அவ்வாறு சிக்கினாலும் தப்பிப்பதற்கு தனது மனைவி அனிதா பிரியாவை வழக்கறிஞராக படிக்க வைத்திருக்கிறார் இந்த மூர்த்தி...
இந்த பகீர் தகவலுக்கிடையே, கொள்ளையடித்த தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றிய இவர்கள், அதனை பாலித்தீன் கவர்களால் சுற்றி தேனி அடுத்த மாரியம்மன் கோயில்பட்டி பகுதியில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருப்பதும் தெரியவந்திருக்கிறது..
புதைத்து வைத்த மறுநாளில்தான், கோயம்புத்தூர் போலீசாரால் வேறொரு திருட்டு வழக்கில் கைதாகி இருக்கின்றனர்..
இதனை அடுத்து தேனி வருவாய்த் துறையினர் முன்னிலையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த 88 சவரன் எடை கொண்ட சுமார் 49 லட்சம் மதிப்புள்ள 6 தங்கக் கட்டிகளை பழனிசெட்டிபட்டி போலீசார் மீட்டிருக்கின்றனர்...
கூடவே, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மூர்த்தியின் மனைவி அனிதா பிரியா, தாய் சீனித்தாய், சகோதரி லட்சுமி மற்றும் அவரின் கணவர் மோகன் ஆகியோரையும் ராஜபாளையம் போலீசார் கைது செய்திருக்கின்றனர்..
குற்றம் சாற்றப்பட்டவர்களின் மீது இதுவரை 50 வழக்குகளில் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் அதையும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.. தகுந்த ஆதாரத்துடன் அவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதோ மேவாட் கும்பல் போல தமிழகத்தில் ஒரு குடும்பமே கொள்ளை குடும்பமாக மாறி நம் மத்தியில் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே அதிர்ச்சி தான்..