தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டுச் சென்றதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிந்தது.
சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் ஏராளமானோர் பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கும், வேறு மாநிலங்களுக்குச் செல்வதற்கும் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால், கோயம்பேடு பேருந்து நிலையம், பயணிகளால் நிரம்பி வழிந்தது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பொதுமக்கள் அரசு பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்து வருகின்றனர். மேலும், விடுமுறை மற்றும் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்க அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் கோயம்பேடு மார்க்கெட்டிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.