4 ஆண்டுகளாக கழிப்பறையில் வசிக்கும் அவலம் - ஒரு குடும்பத்தின் கண்ணீர் கதை
4 ஆண்டுகளாக கழிப்பறையில் வசிக்கும் அவலம் - ஒரு குடும்பத்தின் கண்ணீர் கதை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 4 ஆண்டுகளாக நகராட்சி கழிப்பறையில் குடித்தனம் நடத்தி வரும் ஒரு குடும்பத்தின் அவல நிலையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
"கழிப்பறை" என்ற வார்த்தையை கேட்டாலே முகம் சுளிப்பவர்களை நம்மால் பார்க்க முடியும். இப்படி அருவருக்கத்தக்கதாக நினைக்கும் கழிப்பறை தான் ஒரு குடும்பத்தின் வசிப்பிடம் என்றால் ?... நம்ப முடிகிறதா உங்களால்?... வாருங்கள் இந்த குடும்பத்தின் இந்த அவல நிலைக்கு என்ன காரணம் என்று அவர்களிடமே கேட்கலாம்.
ஆம்... உப்பு காற்றை சுவாசித்து பழகிபோன இந்த குடும்பம் இன்று நிற்கதியாக நிற்க காரணம்... 4 ஆண்டுகளுக்கு முன்பு கோரதாண்டவம் ஆடிய கஜா புயல் தான். இயற்கை பேரிடர் ஏற்படுத்தி விட்டு சென்ற வடு... ஒரு குடும்பத்தையே தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது.
ஆறுதல் கூறி மனதை தேற்றிவிடலாம்... ஆனால் வயிற்று பசியை போக்கவா முடியும்? புயலால் இவர்கள் இழந்தது ஒரே ஒரு வீடாக இருக்கலாம்? ஆனால் அந்த வீடு இன்று, இவர்களின் தலையெழுத்தையே மாற்றி, அடுத்த தலைமுறையை முடக்கி வைத்துள்ளதை என்னவென்று சொல்வது?
76 வயதான தந்தை... அவருக்கோ பார்வை குறைப்பாடு... காதும் கேட்காது.... தாய் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாங்கி பிடிக்க வேண்டிய நிலை.... வறுமை இவர்களுக்கு பழகி போன ஒன்று தான்... ஆனால் கஜா புயலுக்கு முன்பு வரை கஷ்டப்பட்டாவது பிள்ளைகளை கரை சேர்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார், அந்த பெண்மணி. ஆனால் அவரின் நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து சூறையாடி சென்றுவிட்டது, கஜா புயல்.
வசித்து வந்த வீட்டை புயல் சூறையாடிவிட்டு செல்ல... வாடகை வீட்டிற்கு செல்லலாம் என்றால் சாப்பாட்டிற்கே வழியில்லை என்ற நிலை.... இந்த நிலையில் தான், கவுன்சிலரிடம் கேட்டு நகராட்சி கழிப்பறையில் ஓரமாக வசிக்க தொடங்கியுள்ளது, இந்த குடும்பம்.
தற்போது இந்த கழிப்பறைகளை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால் கிடைத்த இருப்பிடமும் கை நழுவும் நிலை என்பதால் கணவர் லட்சுமணனையும் குழந்தைகளான ராஜகுமாரன், வினோஸ்ரீயையும் எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் ஆடி போய் நிற்கிறார், அந்த குடும்பத்தின் ஆணிவேரான கவிதா.
இவர்களை போல் இயற்கை பேரிடர் ஏற்படுத்தி சென்ற இழப்புகளில் இருந்து மீள முடியாமல்... அடுத்த கட்டத்திற்கும் நகர முடியாமல்... வழிகாட்டவும் ஆளில்லாமல்.. இருள் சூழ்ந்த வாழ்க்கையால் இருண்டு போய்விடுவோமோ ? என தவிக்கும் குடும்பங்களுக்கு அரசு உதவ முன்வரவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.