சிறைக் கைதிகள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருச்சி மகளிர் சிறையில் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள தனது தாயாரை வேலூருக்கு மாற்றக் கோரி, அவருடைய மகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கைதியிடம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் போது வேறு சிறைக்கு மாற்ற முடியாது என்றும் சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து சிறைக்குள் போதைப்பொருள் எப்படி வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மேலும், சிறையில் கைதிகளுக்கு வசதிகள் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவ்வாறு நடத்துவதால் சிறைக்குள் பிரச்சினை ஏற்படுவதாக கூறி, அனைத்து கைதிகளையும் சமமாக நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.மேலும், வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.