சென்னையில் திடுக்.. பள்ளிக்குள் எரிந்த நிலையில் நுழைந்த நபரால் அதிர்ச்சி
சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில், நள்ளிரவில் கொழுந்து விட்டு எரிந்தபடி நுழைந்து உயிரிழந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகரில், அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர் விடுதி உள்ளது. இங்கு, இரவு 11 மணியளவில் பயங்கரமான கூச்சல் சத்தம் கேட்டுள்ளது. விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மற்றும் காப்பாளர்கள் வெளியே பார்த்த பொழுது, 40 வயது மதிக்கத்தக்க நபர் கொழுந்து விட்டு எரிந்த நிலையில் கூச்சலிட்டபடி விடுதியை நோக்கி வந்துள்ளார். விடுதியின் உள்ளே நுழைந்ததும், எரிந்த நிலையில் சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்று தெரியாத நிலையில், அவர் யார்? பூட்டப்பட்டிருந்த பள்ளி வளாகத்திற்குள் எப்படி வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் பள்ளி வளாகத்தில் ஒருவர் எரிந்த நிலையில் நுழைந்து உயிரிழந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.