புழல் ஜெயிலில் கருப்பு டேப்பால் சிக்கிய வார்டன் - உடனே உள்ளே இறங்கி சுற்றி வளைத்து போலீசார் செய்த செயல்
சென்னை புழல் விசாரணை சிறையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் கஞ்சா வழக்கில் கைதான திருப்பூரை சேர்ந்த சுகுமார் என்ற கைதியிடம், சிறை முதன்மை காவலர் துரையரசன், கருப்பு நிற டேப்பால் சுற்றப்பட்ட 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை கொடுத்து, கஞ்சா வழக்கில் சிறையில் உள்ள சூளைமேடு சேர்ந்த மெர்வின் விஜய் என்ற கைதியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனை கண்காணித்த சிறை சிறப்பு சோதனை குழு காவலர், சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதன்பேரில் கைதிகளிடம் சோதனை நடத்தியதில், அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், சிறை வார்டன் துரையரசன் கைதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்தது உறுதியானது. இதனையடுத்து துரையரசனை பணியிடை நீக்கம் செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் கஞ்சா பறிமுதல் தொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.