சென்னை புத்தக கண்காட்சியில், திருநங்கைகளின் வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களையும் எடுத்துரைக்கும் புத்தகங்களோடு திருநங்கைகள் பதிப்பகம் அரங்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..
48வது சென்னை புத்தகக் காட்சியானது, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டிசம்பர் 27 ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 12ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இங்குள்ள 900 அரங்குகளில் பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள், ஆய்வு கட்டுரைகள், மொழிப் பெயர்ப்பு நூல்கள், சாகித்ய அகாடெமி விருது பெற்ற நூல்கள் உள்ளிட்ட நூல்கள் பல பதிப்பகங்களில் இடம்பெற்று உள்ளன. அந்த வகையில், இவைகளுடன் மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பேதங்களையும், அவர்கள் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த இன்னல்களையும் விளக்கும் விதமாக பலரது நூல்களும் இடம்பெற்றிருப்பது, இந்த புத்தகக் கண்காட்சிக்கே கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது.
வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடக்கும் இந்த புத்தகக் காட்சியில் ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆர்வமுடன் பார்வையிடுவதோடு, தங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் வாங்கி செல்கின்றனர்.
வாசகர்களின் கூட்டம் அலைமோதும் இந்த புத்தகக் கண்காட்சியில், அரங்கு எண் 208ல் திருநங்கைகள் பதிப்பகம் வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில், திருநங்கைகள் சமூகத்தில் நாள்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள் குறித்தான பதிவுகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவை திருநங்கை பதிப்பகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எழுத்து ஆயுதம் ஏந்துவோம்.. பால் ஆதிக்கம் வீழ்த்துவோம் என்பதையே தங்களது முழக்கமாக கொண்டு இருப்பதாக விளக்குகிறார், திருநங்கை எழுத்தாளரான ஆல்பா..