லிப்ட் கேட்ட பள்ளி சிறுவன்...பாதி வழியிலேயே மரணம் - சென்னை அருகே அதிர்ச்சி
மின்வாரிய டிராக்டர் விபத்தில், பள்ளிச் சிறுவன் பலியான நிலையில், சிறுவனின் உறவினர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தின் கிளை அமைந்துள்ளது. இங்கிருந்து, எலப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்திற்கு, டிராக்டர் மூலமாக 6 மின்கம்பங்களை ஏற்றி வந்துள்ளார் ஓட்டுனர் அசோக். அப்போது அச்சரப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மூன்று மாணவர்கள், பள்ளி முடிந்து வீட்டுக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். பள்ளி மாணவர்கள், அபிஷேக், ரோகித், கிஷோர் ஆகிய 3 பேரும் கம்பம் ஏற்றி வந்த டிராக்டரில் லிப்ட் கேட்டு வந்துள்ளனர். மின்கம்பங்களை ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக , திருமுக்காடு என்னும் இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் மற்றும் பள்ளி மாணவர்கள் மூவரும் காயம் அடைந்து, சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், பள்ளிச் சிறுவன் அபிஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த, காட்டு கருணை கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்கள் எலப்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது