நயினாரை விரட்டும் ரூ.4 கோடி விவகாரம்... CBCIDல் மூவர் ஆஜர் - பரபரக்கும் அரசியல் களம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6ஆம் தேதி 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில், சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக இந்த வழக்கில் ஏற்கனவே கைதான சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், மூவரும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தாம்பரம் போலீசார் விசாரணை நடத்திய 6 பேரிடமும், மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. குறிப்பாக நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.