தொண்டையில் சிக்கிய தைல டப்பா.. ரத்தம் ரத்தமாக வாந்தி எடுத்து 7 மாத குழந்தை
காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆளவந்தார் மேடு கிராமத்தை சேர்ந்த அஜித்-டயானா தம்பதிகளுக்கு குகனேஷ் என்ற 7 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை, தைல டப்பாவை வாயில் போட்டுள்ளது. தொண்டையில் டப்பா சிக்கியதால், கதறி அழுத குழந்தைக்கு வாயில் ரத்தம் கொட்டியுள்ளது. இதைப் பார்த்து பதறிய பெற்றோர், குழந்தையை தூக்கிக்கொண்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை, சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதே நேரத்தில், ஆம்புலன்ஸ் வருவதற்குள், தொண்டையில் சிக்கிய டப்பாவை வெளியே எடுக்க முடிவெடுத்தனர். குழந்தையை மென்மையாக தூக்கிப் பிடித்து தைல டப்பாவை வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர். பின்னர், குழந்தையின் குரல்வளைக்கும், தொண்டைக்கும் எந்தவித சேதமும் ஆபத்தும் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அறுவை சிகிச்சை இன்றி, குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.