அதிபராகும் முன்பே தமிழர் தலையில் இடியை இறக்கிய AKD - அதிரவிட்ட வார்த்தை -அரியணை ஏறியது என்ன நடக்குமோ

Update: 2024-09-23 05:00 GMT

அதிபராகும் முன்பே தமிழர் தலையில் இடியை இறக்கிய AKD - அதிரவிட்ட வார்த்தை -அரியணை ஏறியது என்ன நடக்குமோ

இலங்கையின் புதிய அதிபராகும் அனுரகுமர தமிழர்களை அரவணைப்பாரா? அவரிடம் தமிழர்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

அனுரகுமர திசநாயக.... ஊழல் ஒழிப்பு கோஷத்தை பிரதானமாக கொண்டு, இலங்கை அதிபர் அரியணையை எட்டிப் பிடித்துவிட்டார்.

இலங்கை பொருளாதார நெருக்கடி பொதுவான பிரச்சினையாக தேர்தலில் எதிரொலித்தது.

ஆனால் தமிழர்களை பொருத்தவரையில், போர் முடிந்து இத்தனை ஆண்டுகளாகியும் ராணுவம் நிலத்தை அபகரிப்பதையும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதையும் நிறுத்த வேண்டும், மாகாண சுயாட்சியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆனால் அதிகாரம் எட்டாக்கனியே என்ற நம்பிக்கையின்மையையே வெளிக்காட்டினர்.

இப்போது அனுரகுமர திசநாயக அரியணை ஏறுவதை வரவேற்கும் யாழ்பாணத்தை சேர்ந்த கிஷோர், ஆயுதம் ஏந்தியவர்களுக்கு எங்கள் வலி தெரியும் என நம்புகிறார்.

அனுரகுமரவின் ஜனதா விமுக்தி பெரமுன 80-களில் ஆயுதம் தாங்கிய இயக்கமாக செயல்பட்டது. அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வந்தது. மார்க்சியம் - லெனினியம் என்ற இடதுசாரி கருத்தியலை ஜனதா விமுக்தி பெரமுன கட்சி பேசினாலும், அடிப்படையில் சிங்கள இனவாத கட்சியாகவே செயல்பட்டது...

இப்போதும்... பல பகுதிகளில் தமிழர்களின் ஆதரவு அவருக்கு இருந்தாலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் தாயகமான வடக்கில் அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...

திருகோணமலையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாச முதலிடம் பிடித்த வேளையில், அனுரகுமர 2 ஆவது இடம் பிடித்தார். அம்பாறையிலும் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 971 வாக்குகளோடு 2 ஆவது இடம் பிடித்தார். மட்டக்களப்பில் சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்கே இடையேயே மோதல் காணப்பட்டது. அனுரகுமர 3 ஆவது இடம் பிடித்தார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 412 வாக்குகளோடும், யாழ்ப்பாணத்தில் 27 ஆயிரத்து 86 வாக்குகளோடும் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதல் சுற்றில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக, இம்மாவட்டங்களில் விருப்ப வாக்கு எண்ணிக்கையிலும் சஜித்தே முன்னிலை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் குறித்து பேசிய கிஷோர், தமிழர்களுக்கு மாகாண சுயாட்சியை வழங்க வேண்டும் என்றார்.

சிங்களர் குடியேற்ற விவகாரத்தில் அனுரகுமர சொன்னதை செய்ய வேண்டும் எனவும் சொல்கிறார் யாழ்பானத்தை சேர்ந்த ஜான்... போரில் ஏற்பட்ட ஆறா காயங்களுக்கு களிம்பாக சுயாட்சி இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பாக, இனவாத பிரச்சினைகளை துடைத்து எடுப்பதே எங்கள் ஆட்சியின் நோக்கம், நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று அனுரகுமர திசநாயக உறுதியளித்திருந்தார்.

அதேவேளையில் இந்தியா - இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கான 13 ஆவது சட்டத்திருத்தம் விவகாரத்தில் அவரது கருத்து மாறுப்பட்டதாகவே இருந்தது.

ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் பேசியவர், தான் 13 ஆவது சட்டத்திருத்தத்தை செயல்படுத்துவேன், அதற்கு பதிலாக எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு வரவில்லை என்றது தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அதுவே தேர்தல் நெருங்கியதும், இதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான கடந்த கால முயற்சிகளை தனது அரசாங்கம் முன்னெடுக்கும் என்று குறிப்பிட்டார். அனுரகுமர திசநாயகவின் ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரையில் நீண்டகாலமாக அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது. இத்தகைய சூழலில் அனுரகுமர திசநாயக அரசாங்கம், இவ்விவகாரத்தில் எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்