"சாதி பார்த்து பிரசவம்..? கையை விட்டு எடுத்த கோரம்" - தாய் உடல் மயானம் போகும்போது குழந்தையும் பலி
அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரது மனைவி துர்காதேவி பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 10 ம் தேதி அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அன்று இரவே அவருக்குப் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்த துர்காதேவிக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படாததால் ரத்தப் போக்கு அதிகமானதாகக் கூறப்படுகிறது. துர்காதேவியின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காகத் திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். பின்னர் அங்கிருந்து சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்குச் சிகிச்சை பலனின்றி துர்காதேவி உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த துர்காதேவியின் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாததே துர்காதேவியின் உயிரிழப்பிற்குக் காரணம் எனக் கூறி ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ இணை இயக்குநர் உட்பட பல அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்மந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே, துர்கா தேவி உடலுக்கு அவரது உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்து வந்த நிலையில், திடீரென நேற்று மதியம் குழந்தையும் இறந்ததால் இறுதி சடங்குகள் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, பல மணி நேரங்களுக்கு பிறகு இரவு 10 மணி அளவில் தர்மபுரியில் இருந்து குழந்தையின் உடல் கொண்டு வரப்பட்டு தாய்க்கும், சேய்க்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது.