கட்சி தாவலா? கூட்டணி அழைப்பா? அதிமுகவை அதிரவைத்த சிறு தீப்பொறி - தலை சுற்ற விட்ட செல்லூர் ராஜு

Update: 2024-05-23 06:58 GMT

கட்சி தாவலா? கூட்டணிக்கு அழைப்பா?

அதிமுகவை அதிரவைத்த சிறு தீப்பொறி

விஜய் - எம்ஜிஆர், சேகர் பாபு.. இப்ப ராகுல்

தலைமையை தலை சுற்ற விட்ட செல்லூர் ராஜு

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஒற்றைப்பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கியுள்ளார் செல்லூர் ராஜூ. அது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கும் மிகுந்த தலைவராக அறியப்படுபவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ...

அதையெல்லாம் தாண்டி வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுப்பதற்காக அணையில் தெர்மாகோல்

ஷீட் போட்டு மூடி, நாடு முழுவதும் பிபலமானவர் செல்லூர் ராஜூ....

மனதில் பட்டதை கலகலப்பாக கருத்து சொல்லும் அதிரடி அரசியல் வாதியான இவர், தெரிவிக்கும் தடாலடி கருத்துக்கள் பல நேரங்களில் கட்சித் தலைமையை தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கி விடுவதுண்டு...

'மத்தியில் மோடி வந்தாலும், ராகுல் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' என்று கூறியது.... நடிகர் விஜய்,

எம்ஜிஆர் போல் தான் சம்பாதித்ததை மக்களுக்கு செலவு செய்ய நினைக்கிறார் என்றது....திமுக அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டியது என இந்த பட்டியல் நீள்கிறது...

அந்த வகையில், இம்முறை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து இவர் வெளியிட்ட பதிவு ஒன்று... அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதுமே... திமுகவின் நெருங்கிய கூட்டாளியான காங்கிரஸ் கட்சியை தன் பக்கம் இழுக்க அதிமுக தூது விடுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

அப்படி இருக்கையில் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுலை நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என்று பதிவிட்டு, ராகுல் உணவருந்தும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் செல்லூர் ராஜு பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் செல்லூர் மூலம் காங்கிரசுக்கு அதிமுக தூது விடுகிறதா? அல்லது காங்கிரஸில் செல்லூர் ராஜு இணைய இருக்கிறாரா ? நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக யாருக்கு ஆதரவளிக்கும் ? என்றெல்லாம் கேள்விகள் சமூக வலைதளத்தில் உலாவ தொடங்கிவிட்டன.

அதோடு, செல்லூர் ராஜுவின் இந்த கருத்தை காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூரும் மாநிலத் தலைவர்

செல்வப் பெருந்தகை வரவேற்க...விஷயம் விஸ்வரூபமெடுக்க தொடங்கியது...

இதனால் சொந்தக் கட்சியினரின் விமர்சனத்திற்கு அவர் ஆளாகி பல அழுத்தங்களை சந்திக்க நேரிட்டதாக கூறப்பட்ட

நிலையில், ராகுல் குறித்து தாம் போட்ட பதிவை நீக்கி சர்ச்சைகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார், செல்லூர் ராஜு.

அவர் பதிவை நீக்கிவிட்டாலும், கலகலப்பான மனிதரான செல்லூர் ராஜூ அந்த பதிவை எதார்த்தமாக போட்டாரா? அல்லது எதையேனும் எதிர்பார்த்து போட்டாரா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்