மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தற்கொலை.. மகளின் துப்பட்டாவால் தூக்கிட்டுக் கொண்ட சோகம்
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் 2020ல் டிசம்பர் மாதத்தில் அரங்கேறியது ஓர் சோகம்....
சின்னத்திரையில் புகழின் உச்சியில் இருந்த நடிகை சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியது திரையுலகம்...
சித்ராவின் இறுதி அஞ்சலியில் சின்னத்திரையை சேர்ந்த நட்சத்திரங்கள் கண்ணீருடன் நிற்க, மகளை இழந்த துக்கத்தில் தந்தை காமராஜ் மனமுடைந்து வித்தியாசமானவராக நடந்து கொண்டதை அத்தனை எளிதில் மறக்க முடியாது...
மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் சட்ட போராட்டமும் நடத்தி வந்தார் சித்ராவின் தந்தை...
குறிப்பாக சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவரான ஹேம்நாத் காரணம் என குடும்பத்தினர் குற்றஞ்சாட்டிய நிலையில், 4 ஆண்டுகளாக இது தொடர்பான வழக்கும் நடந்து வந்தது...
இச்சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம், இந்த வழக்கில் இருந்து ஹேம்நாத் விடுதலையானார்..
இதனை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இப்படி, மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என உறுதியாக இருந்த தந்தை காமராஜ்க்கு, ஹேம்நாத்-ன் விடுதலை செய்தி மன வேதனையை கொடுத்துள்ளது..
இது மட்டுமன்றி, சித்ரா மீடியாவிற்குள் நுழையும் போதே, வேண்டாம் என தந்தை தடுத்ததாக பல நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார் சித்ராவின் தாயார்...
என்ன தான் சட்டப் போராட்டம், நேர்காணல் என மன உறுதியுடன் இருப்பதாக காட்டிக் கொண்டாலும், பார்த்து பார்த்து வளார்த்த மகள் உயிரிழந்ததை தாளாமல் 4 வருடங்களாக துக்கத்திலேயே வாழ்ந்து வந்தார் தந்தை காமராஜ்..
மகளின் நினைவிலேயே வாடிய அவர், மகளின் நினைவாக இன்னொரு பெண்ணின் குடும்பத்தினரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்து பார்த்துக் கொண்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவர், மகள் மறைவால் மன உளைச்சலில் இருந்த நிலையில், அவரது மகளின் அறையிலேயே படுத்து உறங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படி மகள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த அவர், செவ்வாய்கிழமையன்று காலை 7 மணி ஆகியும் அறை கதவை திறக்கவில்லை..
இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது, அறையின் மின்விசிறியில் மகளின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ந்த உறவினர்கள், போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சித்ரா கடந்த 2020ல் டிசம்பர் 9ஆம் தேதி உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் உயிரிழந்து சரியாக 4 வருடங்கள் ஆன நிலையில் அதே டிசம்பர் மாதம் சித்ராவின் தந்தையின் உயிரும் பறிபோயிருக்கிறது உறவினர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.