இன்ஸ்பெக்டருக்காக ஊர்மக்கள் கண்ணீர் ஸ்ட்ரெச்சர் பின்னாலேயே ஓடி வந்த கலெக்டர், SP நீதிக்கும், நேர்மைக்கும் கிடைத்த பெரும் பரிசு ஒன்றுகூடி சக போலீசார் கூட்டுப்பிரார்த்தனை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் பூரண உடல் நலம் பெற வேண்டி கடலூரில் சக காவலர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேர்மை, மனிதநேயம், உடனடி நடவடிக்கை என தனது நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மரியாதையுடன் பார்க்கப்படுபவர் கடலூர் புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் குருமூர்த்தி....
மேலும், தோழமை, நட்பு, உதவும் குணம் உள்ளிட்ட நற்பண்புகளையும் ஒருங்கே பெற்று இருந்ததால் ஆய்வாளர் குருமூர்த்தி சக காவலர்கள் மனதிலும் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளார்.
இந்த நிலையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை,. 2 தினங்களுக்கு முன் திடீரென மயக்கமடைந்த ஆய்வாளர் குருமூர்த்தி புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதனை கேள்விபட்டு குடும்பத்தினர் அடைந்த வேதனையைவிட அப்பகுதி மக்களும், உடன் பணியாற்றிய காவலர்களும் அடைந்த வேதனையே அதிகம் என தெரிவித்துள்ளனர், மருத்துவமனை ஊழியர்கள்...
ஆய்வாளர் குருமூர்த்தி உடல் நிலை குறித்து கேள்விப்பட்டவுடன் மருத்துவமனைக்கு ஓடோடி வந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் அளித்த பிரிந்துரையின் பேரில் மேல் சிகிச்சைக்காக குருமூர்த்தி சென்னை அழைத்து செல்லப்பட்டார். அப்போது ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் ஸ்டெக்ச்சர் பின்னாலேயே ஓடி வந்தது குருமூர்த்தியின் நேர்மைக்கு கிடைத்த பரிசாகவே பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆய்வாளர் குருமூர்த்தி மீதும் அவரின் நேர்மையான பணி மீதும் பற்று கொண்ட ஏராளமான சக போலீசார், அவர் பூரண நலம் பெற வேண்டி கடலூர் புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோயிலில் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.