விளவங்கோடு வேட்பாளர் யார்?..சர்மிளா ஏஞ்சலுடன் மல்லுகட்டும் வதனா - சைலண்ட்டாக காய் நகர்த்தும் லாரன்ஸ்
விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் என, அக்கட்சியினரிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலோடு விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக, காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், வேட்பாளர் யார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தசூழலில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா, மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் சர்மிளா ஏஞ்சல், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினு லால் சிங், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி லாரன்ஸ் ஆகியோர், சீட் கேட்டு மேலிட தலைவர்களிடம் காய் நகர்த்தி வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து காங்கிரஸ் வந்த கே.ஜி.ரமேஷ்குமாரும், சீட்டுக்காக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் விளவங்கோடு தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.