கலங்கி நிற்கும் மணிப்பூர்..கதறும் பெண்கள்.. படையெடுத்த எதிர்க்கட்சி குழு - கையை பிடித்து ஆறுதல் கூறிய கனிமொழி

Update: 2023-07-30 06:03 GMT

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த 21 எம்.பிக்கள் அடங்கிய குழுவினர், மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து பேசினர். இதை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு..

மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை சேர்ந்த 21 எம்.பி-க்கள் அடங்கிய குழு, அம்மாநில தலைநகர் இம்பால் சென்றடைந்தது.

இந்த குழுவில் திமுக எம்.பி. கனிமொழி, விசிக எம்.பி. திருமாவளவன் உள்பட 21 எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.

2 நாள் பயணமாக தலைநகர் இம்பால் சென்றடைந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து சென்று, வெவ்வேறு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ள பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

அந்த வகையில், கிழக்கு இம்பாலில் உள்ள ஐடியல் காலேஜ், பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள மொய்ராங் கல்லூரி, மற்றும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது, அங்கு தங்கியுள்ள மக்கள், தாங்கள் சந்தித்து வரும் துயரங்களை கண்ணீர் மல்க தெரிவித்த காட்சி மனதை உருக்குவதாய் அமைந்தது.

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, "நிவாரண முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

அதேபோல, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகோய், "எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் மட்டும் தான் மணிப்பூருக்கு நேரில் வருகை தந்து ஆய்வு செய்து வருவதாகவும்,

மணிப்பூர் மக்களின் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரதிபலிக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக அரசு அறிவித்துள்ள நிலையில், அங்குள்ள மக்கள் இன்னும் முகாம்களில் தங்கியிருப்பது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினார்.

காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, "பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும், நிவாரண முகாம்களில் ஆய்வு நடத்திய பின் ஆளுநரை சந்திக்க போவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, மணிப்பூர் ஆளுநர் அனுசூயா உய்க்கேவும், வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.

வெவ்வேறு நிவாரண முகாம்களில் உள்ள மக்களை நேரில் சந்தித்து பேசிய எதிர்க்கட்சி எம்.பிக்கள், அடுத்த கட்டமாக மணிப்பூர் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, தங்களின் 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லிக்கு திரும்பும் எதிர்க்கட்சி எம்.பிக்கள், மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விவாதத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்