அம்மாவுக்கு 24 மணி நேரம் ராகுல் கெடு.. கண்ணீர் விட்ட சோனியா - அடுத்த சம்பவம் உலக சரித்திரமானது

Update: 2024-12-28 03:44 GMT

எதிர்பாராத விதமாக அரசியலுக்கு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2004 ஆம் ஆண்டு பிரதமர் ஆனது எப்படி? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு

2004 நாடாளுமன்றத் தேர்தல்... பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

தொடர்ந்து வெற்றிப்பெற்ற காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் யார் பிரதமர் என்ற சஸ்பென்ஸ் தொடர்ந்தது.

சோனியா காந்தி பிரதமர் ஆக ஆதரவளித்தார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள். அப்போது இத்தாலியில் பிறந்தவர் இந்தியாவின் பிரதமரா? என்ற விமர்சனங்களால் கொந்தளிப்பான அரசியல் சூழல். சோனியா பிரதமர் ஆவதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு வலுத்தது.

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், சோனியா காந்தி மட்டும் பாரத பிரதமர் ஆனால்... ஒரு இந்து விதவையின் வாழ்க்கையை வாழ்வேன் என சூளுரைத்தார். வாழ்நாள் முழுவதும் வெள்ளை சேலையே கட்டுவேன், தலையை மொட்டையடித்துக் கொள்வோன், தரையிலேயே தூங்குவேன் என்றார் சுஷ்மா...

பாஜக எதிர்ப்பை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பின்வாங்கினார் சோனியா காந்தி. என் மனசாட்சியின் குரலுக்கு மட்டுமே செவி சாய்ப்பேன், அந்த குரல் எனக்கு நான் பிரதமர் பதவியை ஏற்க கூடாது என சொல்வதாக சொல்லி விட்டார் சோனியா காந்தி.

சோனியா காந்தி பிரதமர் பதவியை நிராகரிக்க தூண்டியது என்ன..? என்பது புரியாத புதிராக இருந்தாலும், பின்னால் நடந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா சௌத்ரி, தன்னுடைய How Prime Ministers Decide புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 2004 மே 17- டெல்லி 10 ஜன்பத் சோனியா காந்தி இல்லத்தில் நடந்தது குறித்து முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்ததை குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவிடம் பேசிய ராகுல் காந்தி, அம்மா நீங்கள் பிரதமர் ஆக கூடாது என சொன்னதாக குறிப்பிட்டுள்ளார். தேசத்திற்காக எனது பாட்டி கொல்லப்பட்டார், தந்தை கொல்லப்பட்டார், நீங்களும் கொல்லப்படுவீர்கள் அம்மா என்ற ராகுல் காந்தி, கடுமையான முடிவை எடுப்பேன் என்று எச்சரித்ததோடு, முடிவெடுக்க சோனியாவுக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுத்தார் என நட்வர் சிங் தெரிவித்து இருக்கிறார்.

மகனுக்கு அம்மாவாக சோனியா காந்தியால் ஒரு முடிவை அப்போது எடுக்க முடியவில்லை, அவரது கண்களில் கண்ணீர் மட்டும் வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அதே நாளில் டெல்லி 10 ஜன்பத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களை அழைத்தார் சோனியா காந்தி.

நட்வர் சிங், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, சிவ்ராஜ் பாட்டீல், குலாம் நபி, அகமது படேல் ஆகியோர் இருந்தனர். பிரதமருக்கான ரேசில் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி இருப்பதாக தகவல்கள் வெளியான வேளையில் மன்மோகன் சிங்கை பிரதமராக கேட்டார் சோனியா காந்தி.

சற்று கூட்டத்தில் அமைதி ஏற்பட... மறுமொழியாக சோனியாவுக்கு நன்றி தெரிவித்த மன்மோகன் சிங், பெரும்பான்மை இல்லாததால் தங்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என சொல்லியிருக்கிறார். மறுக்கும் உரிமை மன்மோகனுக்கு இல்லை... பெரும்பான்மை கொண்டவரே பதவியை வழங்குகிறார் என மன்மோகன் சிங்கிடம் பதில் கூறியிருக்கிறார் நட்வர் சிங்.

அடுத்த நாள் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் குடியரசு தலைவர் மாளிகையில் அப்துல் கலாமை சந்தித்தனர். அதன் தொடர்ச்சியாக அதிகாரப்பூர்வ பிரதமராக அறிவிக்கப்பட்டார் மன்மோகன் சிங்... இப்படி எதிர்பாராத வகையில் பிரதமர் ஆனவர், சோனியா காந்தியின் நிழலாக 2014 வரையில் 10 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்