விடுதியில் தனிமையில் பிறந்த குழந்தை...தோழிகள் வருவதற்குள் குளத்தில் வீசிய பெண் - சென்னை அருகே அதிர்ச்சி
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரகடம் பகுதியில் உள்ள விடுதியில் குழந்தை பிரசவித்து, பின்னர் குழந்தையை குளத்தில் தூக்கி வீசியதில் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..அசாம் மாநிலத்தை சேர்ந்த சர்ஃபுதீன் என்பவரது மகள் ஷகீனா பேகம் என்பவரும், அதே மாநிலத்தைச் சேர்ந்த சுமன் என்கிற இந்து இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்துள்ளனர். சுமனும், ஷகீனா பேகமும் நெருக்கமாக பழகியதால், அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இதனிடையே, தலைமறைவாகிய சுமனைத் தேடி கர்ப்பிணியான ஷகீனா பேகம் அசாம் மாநிலம் சென்று தேடியும் கிடைக்கவில்லை. மீண்டும் தமிழ்நாடு வந்த ஷகீனா பேகத்திற்கு, பெண்கள் விடுதியில் இருந்தபோது, பிரசவ வலி ஏற்பட்டு விடுதியிலேயே பெண் குழந்தை பிறந்தது. பின்னர், பயத்தில் தோழிகள் வருவதற்குள் குழந்தையை குளத்தில் வீசியுள்ளார். அங்கு வந்த சக தோழிகள் இதை அறிந்தவுடன் ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். தகவல் அறிந்த ஒரகடம் போலீசாரிடம், தன்னை காதலன் ஏமாற்றியது உள்ளிட்ட அனைத்தையும் கூறி அப்பெண் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த பெண் குழந்தையை, ஷகீனா பேகத்தின் விருப்பத்தின் பேரில், இஸ்லாமிய முறைப்படி, செங்கல்பட்டு நவாப் ஜாமியா பள்ளிவாசலில் அடக்கம் செய்தனர். தொடர்ந்து போலீசார் அப்பெண்ணை மருத்துவமனையில் கண்காணித்து வருகின்றனர்.. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.