5 கோடி பட்ஜெட் 50 கோடி வசூல்`மல்லுவுட்’ காட்டில் கொட்டும் பண மழை-மாயம் நிகழ்த்தும் மலையாள சேட்டன்கள்

Update: 2024-03-03 16:47 GMT

சின்ன பட்ஜெட்களில் படமாக்கப்பட்டு, மெகா லாபத்தை குவிக்க துவங்கியிருக்கிறது மலையாள சினிமா...மாயம் நிகழ்த்தும் மலையாள சினிமாக்களின் வணிகரீதியான வெற்றியை அலசுகிறது இந்த தொகுப்பு...

நம் ஊர் பக்கம் ஒரு பழமொழி உண்டு கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது...மல்லுவுட் சினிமாவும் அப்படித்தான் சின்னதான சினிமா வட்டமென்றாலும், சமீபத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்

ஒற்றை இலக்க கோடிகளில் பட்ஜெட் ஒதுக்கப்பட்டு தயாரிக்கப்படும் படங்கள் மல்லுவுட்டில் அதிகம். பெரும்பாலும் ரா' வான கதைக்களத்தில் படங்கள் பயணிக்கும்.. குறைந்த கோடிகளை சம்பளமாக பெறும் கதாநாயகன்கள் மல்லுவுட்டில்தான் அதிகம்... அதே நேரத்தில் அங்கே ஆணாதிக்க சினிமாதான், பெண்களின் பார்வையில் இருந்து நகரும் படங்கள் மிகக்குறைவு... இப்படி பல பிளஸ், மைனஸ்களையும் கொண்டதுதான் மல்லுவுட் சினிமா

தமிழ் சினிமாவில் 50 கோடிகளை கடந்த படங்களை டஜன் கணக்கில் சொல்லலாம், ஆனால் மலையாள சினிமாவிற்கு 50 கோடி ரூபாய் வசூல் என்பது பெரிய இலக்காகவே இருந்தது. கடந்த ஆண்டில் மல்லுவுட் சினிமா கொடுத்த வெற்றிப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்... ஆழமான கதைக்கருவை கொண்டிருந்த போதும், வணிகரீதியாக பெரிதான வசூல் இல்லாமல் போய்விடும்

ஆனால் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே கல்லா கட்ட துவங்கி விட்டது மல்லுவுட் சினிமா... த்ரில்லர் படமாக எடுக்கப்பட்ட ஆபிரகாம் ஒஸ்லெரின் பட்ஜெட் வெறும் 6 கோடிதான். ஆனால் வணிகரீதியாக 40 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது ஆபிரகாம் ஒஸ்லர்

கடந்த பிப்ரரி மாதத்தில் வெளியான பிரேமலு படத்துக்கு செலவு செய்யப்பட்ட ஒட்டு மொத்த தொகை என்பது 3 கோடி ரூபாய்தான். ஆனால் தியேட்டரில் கூட்டம் குறையாமல் பார்த்துக் கொண்டது கதை. இந்த படத்தின வருமானம் 50 கோடி ரூபாயை கடந்து சென்றுவிட்டது

மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் படம் 20 கோடி பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட படம்தான். ஆனால் வசூலில் சக்கைபோடு போட்டது. மொத்தமாக 50 கோடி ரூபாயை கடந்து செல்கிறது. மஞ்சுமேல் பாய்ஸ் படமானது 5 கோடிக்குள் எடுக்கப்பட்டிருந்தாலும், அந்த படமும் 50 கோடிக்கும் மேலான வருவாயை அள்ளியுள்ளது.

தான் உருவாக்கிய கதைகளில் சமரசம் செய்யாத, இயக்குநர்கள் மல்லுவுட் சினிமாவில் அதிகம் என்றாலும், வணிகரீதியாக மல்லுவுட் சினிமா விமர்சனத்தில் சிக்கி தவித்தது. ஆனால் இன்றோ, மல்லுவுட் சினிமாவை பார்த்து பாலிவுட் சினிமா வரை ஏக்கப்பெருமூச்சு விடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்