ஓசூர் அருகே உள்ள சொப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான திலக் என்ற இளைஞர், ரிங் ரோடு பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில் டீ அருந்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் 4 பேர், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், திலக்கை சரமாரியாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மத்தகிரி பகுதியில் நடந்த கொலை சம்பவத்திற்கு, பழிக்குப் பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக தெரியவந்துள்ளது. தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.