இர்ஃபானின் சொகுசு கார் மோதி பெண் பலி.. "காரை ஒட்டியது நான்தான்" சரணடைந்த நபர்...விபத்து நடந்த நேரத்தில் என்ன நடந்தது?
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே, பிரபல YOUTUBER இர்ஃபானின் சொகுசு கார் மோதி பெண் உயிரிழந்த சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு...
விதவிதமான உணவுகளை உண்டு, அதனை வீடியோவாக தனது யூடியூப் தளத்தில் பதிவு செய்து பிரபலமானவர்தான் இந்த இர்ஃபான்...
சினிமா நட்சத்திரங்களுடன் கலகலப்பாக பேசி இவர் அப்லோடு செய்யும் வீடியோக்கள், சமூகவலைதளங்களில் லைக்கை அள்ளும்...
யூடியூபர் இர்ஃபானின் சொகுசு கார் விபத்தில் சிக்கி, ஒரு பெண்மணியின் உயிர் பலி வாங்கியதுதான் தற்போது நடந்துள்ள சம்பவம்...
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.
பணி முடிந்த நிலையில் மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்ற பத்மாவதி, மீண்டும் கோனாதியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது, வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மோதியதில், பத்மாவதி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள், அதிர்ச்சியில் உறைந்து போன நிலையில், தகவலின் பேரில் வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், அந்த காரின் பதிவெண்ணை வைத்து உரிமையாளர் யார் என விசாரித்த போது, பிரபல YOUTUBER இர்ஃபான் என தெரியவந்தது.
ஆனால், விபத்து நடந்த நேரத்தில், இர்ஃபானை பார்த்ததாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், திடீரென நான்தான் காரை ஓட்டினேன் என ஒரு நபர் போலீசாரிடம் வந்து சரணடைந்தது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அவர் யாரென்று போலீசார் விசாரித்தபோது, சென்னை சித்தலப்பாக்கத்தைச் சேர்ந்த அசாருதீன் என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அசாருதீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது கைதான அசாருதீன் தானா- அல்லது யூடியூபர் இர்பான்தானா? என்பது போலீசாரின் விசாரணக்குப் பிறகே வெளிச்சத்திற்கு வரும்...