செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?.. கைதான மற்ற மாநில அமைச்சர்கள் நிலை என்ன? - ED துறை வரலாறு உணர்த்துவது இதை தான்..!

Update: 2023-06-16 08:37 GMT

அமலாக்கத்துறை கைதில் சட்டம் கொண்டிருக்கும் வலுவான ஜாமீன் நடைமுறையையும், முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் யார்... யாரெல்லாம் சிறையில் இருக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறது இந்த தொகுப்பு

இந்தியாவில் பொருளாதார குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக அமலாக்கப்பிரிவு இருக்கிறது. நாட்டில் அதிகாரமிக்க அமைப்பாகவும் பார்க்கப்படுகிறது. கருப்பு பண தடுப்புச் சட்டத்தில் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்படுவோர் ஜாமீன் பெறுவது என்பது மிக கடுமையானதாக இருக்கிறது.

கருப்பு பண தடுப்புச் சட்டம் 2002 பிரிவு 45, கைது செய்யப்பட்டவர் ஜாமீன் பெறுவதற்கான காரணங்களை வகைப்படுத்துகிறது. இந்த பிரிவு இரட்டை ஜாமீன் நிபந்தனையை கொண்டிருக்கிறது.

முதலில் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஜாமீனில் விடுதலை செய்யக்கூடாது என அமலாக்கத்துறை வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அமலாக்கத்துறை எதிர்ப்புக்கு மத்தியில், குற்றம் சாட்டப்பட்ட நபர், குற்றத்தை செய்திருக்க வாய்ப்பில்லை எனவும் ஜாமீனில் விடுதலை செய்யப்படும்போது குற்றம் புரியமாட்டார் என நம்புவதற்கு திருப்தியான காரணங்கள் இருந்தால் நீதிமன்றம் ஜாமீன் வழங்கலாம்.

அமலாக்கப்பிரிவு அதிகாரத்திற்கு எதிராக 242 வழக்குகள் தொடரப்பட்டதில், இந்த ஷரத்தை 2022 ஜூலையில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் சூழலில், இதேபோன்று மராட்டியம், டெல்லி, மேற்கு வங்கத்தில் அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்ட மாநில அமைச்சர்கள் நீண்ட நாட்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளனர்.

2022 மே மாதம் டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் வழுக்கி விழுந்த அவருக்கு மருத்துவ சிகிச்சை காரணமாக கிட்டத்தட்ட ஒராண்டு கழித்து கடந்த மே 26 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கிடைத்தது.

2022 ஜூலையில் மேற்கு வங்கத்தில் மாநில தொழில்துறை அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜியை, ஆசிரியர் நியமன ஊழலில் அமலாக்கத்துறை கைது செய்தது. இன்னும் ஜாமீன் கிடைக்காமல் சிறையிலே இருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் மராட்டிய மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த நவாப் மாலிக் கருப்பு பண தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை. சிறுநீர கோளாறு இருப்பதாக மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

கடந்த மார்ச் மாதம் டெல்லி கல்வித்துறை அமைச்சராக இருந்த மணிஷ் சிசோடியாவை மதுபானக் கொள்கை முறைகேட்டில் அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்