"2025க்குள் காச நோயை ஒழிக்க செயலாற்றி வருகிறோம்" - பிரதமர் மோடி பெருமிதம்
வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, உலக காசநோய் தினத்தையொட்டி காச நோய் தொடர்பான மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது காச நோய் இல்லா பஞ்சாயத்து என்ற முன்னெடுப்பையும் துவக்கி வைத்த அவர், குறுகிய காசநோய் தடுப்பு சிகிச்சை முறையையும், இந்தியாவின் காசநோய் ஆண்டறிக்கையையும் வெளியிட்டார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் காச நோய்க்கு எதிரான போரில், பல்வேறு முனைகளில் இந்தியா பணியாற்றி இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியா, காச நோயை 2025 ஆம் ஆண்டுக்குள் ஒழிக்க செயலாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். காச நோய்க்கான 80 சதவீத மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது, நமது மருந்தகத் துறையின் திறனையும், திறமையையும் காட்டுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.