அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் அத்துமீறல்.. மாமனாரை தேடிய மருமகனுக்கு அதிர்ச்சி.. ஓனர், ஓனரின் மனைவி கைது
- விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர் உள்ளிட்டவர்கள் இங்கு உள்ளனர்.
- இதனிடையே திருப்பூரை சேர்ந்த முதியவர் ஜபருல்லாவை அவரின் மருமகன் சலீம்கான் கடந்த 2021 டிசம்பர் மாதம் அன்புஜோதி ஆசிரமத்தில் விட்டுள்ளார். அமெரிக்காவில் இருந்த போதிலும் தன் நண்பர் ஹாலிதீன் மூலமாக தன் மாமனாரை ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.
- இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய சலீம்கான், தன் நண்பர் ஹாலிதீனுடன் சென்று தன் மாமனாரை பார்க்க சென்றுள்ளார். அங்கே தன் மாமனார் குறித்து ஆசிரம நிர்வாகம் எந்த பதிலுக்கும் சொல்லாமல் இருக்கவே சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது...
- பின்னர் தொடர்ந்து விசாரித்த போது அந்த முதியவர் பெங்களூருவில் இருப்பதாக கூறியிருக்கின்றனர். மேலும் ஆசிரம தரப்பின் பதில் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக இருக்கவே வேறுவழியின்றி சலீம்கான் கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
- மேலும் தன் மாமனாரை மீட்டுத் தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அப்போது இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
- விசாரணை நடத்த போலீசார் ஆசிரமத்திற்கு சென்ற போது அங்கே ஆசிரம உரிமையாளரான ஜீபின், ஆசிரமத்தில் வளர்த்து வந்த 2 குரங்குகளை கூண்டிலிருந்து திறந்து விட்டார். அப்போது அந்த குரங்குகள் கடித்ததில் 10 முதியவர்களை கடித்ததில் அவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஆசிரமமானது உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்ததும் தெரியவரவே, ஆவணங்களை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். மேலும் ஆசிரமத்தில் இருந்தவர்கள் குறித்த ஆவணங்களையும் அவர்கள் முறையாக பராமரிக்கவில்லை என்பதும் அதிர்ச்சியை தந்தது.
- உடனடியாக ஆசிரமமானது வருவாய் துறை அதிகாரிகள் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. வருவாய்த்துறை, சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ஆசிரமத்தில் இருந்த 32 பெண்கள், 120 ஆண்கள் என மொத்தம் 152 பேரை தனித்தனி குழுக்களாக பிரித்த போலீசார் அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
- அப்போது அங்கே இருந்த பலரும் பாலியல் கொடுமைக்கு ஆளானதும் விசாரணையில் தெரியவரவே அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
- மேலும் ஆசிரமத்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் மாயமானதும் வெளிச்சத்திற்கு வந்தது...
- உடனடியாக ஆசிரமத்தில் இருந்த 86 பேரை மீட்ட அதிகாரிகள் அவர்களை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
- உடனடியாக ஆசிரமத்தின் உரிமையாளர் ஜீபின், நிர்வாகத்தை சேர்ந்த பியூ மோகன், அய்யப்பன், முத்து மாரி, கோபிநாத் ஆகிய 4 பேரை போலீசார் முதற்கட்டமாக கைது செய்தனர்.
- தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆசிரமத்தில் நடந்த அத்தனை அத்துமீறல்களுக்கும் ஆசிரம உரிமையாளரின் மனைவியான மரியா ஜீபினுக்கு தொடர்பு இருப்பது உறுதியானது. உடனே அவரையும் கெடார் போலீசார் கைது செய்தனர்.
- மேலும் ஆசிரமத்தில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அடித்து துன்புறுத்தியதும், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் ஆசிரமத்தை நடத்தி வந்தது என அத்தனை அத்துமீறல்களும் அங்கே நடந்து வந்தது தெரியவந்தது.
- இந்த ஆசிரமத்தின் மற்றொரு கிளையானது கோட்டக்குப்பத்தில் இயங்கி வந்த நிலையில் அங்கிருந்த 25 பேரையும் போலீசார் பத்திரமாக மீட்டனர்...
- காப்பகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கியவர்கள் எத்தனை பேர்? மாயமானவர்கள் எத்தனை பேர்? யாருக்கெல்லாம் பாலியல் தொல்லை தரப்பட்டது? யாரெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள்? என்பது உள்ளிட்ட தகவல்கள் விசாரணைக்கு பின்னரே வெளிச்சத்திற்கு வரும்...