14 நிமிடத்தில் 29 செய்திகள் | மாலை தந்தி எக்ஸ்பிரஸ்

Update: 2023-06-12 12:33 GMT

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை வருகிற 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு திறந்து வைப்பதாக இருந்த நிலையில், வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதால் அவரது சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது. வருகிற 15ம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைக்க முயன்ற நிலையில், மீண்டும் அவரது வருகை ரத்தானதால், மருத்துவமனையை வருகிற 15ம் தேதி முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறுவை சாகுபடிக்காக சேலம் மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். மேலும், 75 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி நெல் தொகுப்பு திட்டத்தை அறிவித்தார். பாசன நீரை விவசாயிகள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், நடப்பு குறுவை பருவத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 50 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி அதிகரிக்கும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் வளர்ச்சியின் உந்து சக்தியாகவும், மாற்றத்தின் முகவராகவும் பெண்கள் திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். வாரணாசியில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் வளர்ச்சி அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய அவர், நமது நீடித்த வளர்ச்சியை பின்தங்காமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கம் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வந்திருப்பதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.

பிபோர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிதீவிர நிலையில் உள்ள பிபோர்ஜாய் புயல் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளில் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவிகளுக்கு மலர் தந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றார். விரும்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு பூ கொடுத்து, இனிப்புகளை வழங்கி இன்முகத்துடன் வரவேற்றார். தொடர்ந்து பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைத்த அமைச்சர், வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களுக்காக போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து மாணவர்களை மகிழ்ச்சியடைய வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்