திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளம் போல் தோற்றமளிக்கும் மேலும் ஒரு போலி இணையதளம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், 300 ரூபாய் தரிசன டிக்கெட், கட்டண சேவை மற்றும் தங்கும் அறைகளுக்கு தேவஸ்தானத்தின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர். கோயிலுக்கு ஈ-உண்டியல் மூலம் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்களும், அதே இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளம் போன்று தோற்றமளிக்கும் போலி வெப்சைட்டுகள் ஏற்படுத்தி பக்தர்களிடம் மோசடி நடைபெறுவதாக எழுந்த புகாரில், 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு போலி இணையதளம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேவஸ்தான நிர்வாகம் சார்பில், திருமலையில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி வெப்சைட்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் பணியில் ஆந்திர மாநில தடய அறிவியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, குளறுபடிகளை தவிர்க்கும் வகையில், தேவஸ்தானத்தின் மொபைல் செயலியை பக்தர்கள் பயன்படுத்துமாறு, தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.