ஹெல்மெட்டை வண்டியில் மாட்டிவிட்டு டிரிபிள்ஸ்.வீடியோ எடுத்தவரை போலீஸ் முன் தாக்கியதால் பரபரப்பு

Update: 2023-07-06 15:22 GMT

சென்னையில், ஹெல்மெட் அணியாமல் ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பெண்களை, இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்த நிலையில், அவரை பெண் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

செல்போனை கையில் வைத்துக்கொண்டு "எனது கண் முன் விதி மீறலா..." என போக்குவரத்து விதிகளை மீறுவோரை புகைப்படம் எடுக்கும் சென்னை மக்கள்... காவல்துறையை டேக் செய்து ட்விட்டரில் புகாரளிப்பது வாடிக்கையான ஒன்று...

இவ்வாறு பதிவிடப்படும் புகார்களுக்கு காவல்துறையும் தொடர்ந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், இதில், சில காவல்துறை வாகனங்களும் விதிகளை மீறி அபராதத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது...

இந்நிலையில், தற்போது 3 பெண்கள் ஒரே பைக்கில் சென்றதை ட்விட்டரில் பதிவிட்டு புகாரளிப்பதற்காக இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தது சென்னையின் முக்கிய பகுதியை களேபரத்துக்குள்ளாக்கியுள்ளது...

சென்னை, அடையார் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி எதிரே மூன்று பெண்கள் ஒரே சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறி சென்றுள்ளனர்...

இதை அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர், மூவரையும் வழிமறித்து விசாரிக்கவே, அவர்கள் போலீசாரிடம் தனது தோழிக்கு உடல்நிலை சரியில்லையெனவும், அவசர தேவைக்காகவே இவ்வாறு செல்வதாக கூறி சென்றுள்ளனர்...

இவ்வாறு, போலீசாரிடம் பேசி விட்டு பெண்கள் செல்ல முயன்ற போது, அங்குள்ள டீக்கடையில் டீ அருந்தி கொண்டிருந்த சென்னை, ஊரப்பாக்கத்தை சேர்ந்த அருண் குமார் என்ற இளைஞர் மூவரையும் புகைப்படம் எடுத்துள்ளார்...

இதை எதேச்சையாக பெண் ஒருவர் பார்த்துவிட, சட்டென பைக்கில் இருந்து இறங்கி வந்த அவர், இளைஞரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவரை தாக்க ஆரம்பித்தது

பரபரப்பை ஏற்படுத்த, அந்த இடத்தில் கூட்டம் கூடி களேபரமானது...

இதை கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து காவலர் ராஜேஷ், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்...

தோழிக்கு உடம்பு சரியில்லாததால் அவசரமாக செல்லும், தங்களை எப்படி நீ புகைப்படம் எடுக்கலாம் என பெண்கள் தரப்பும்...

முறையாக ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதியை மீறி சென்றதால், புகாரளிக்கவே புகைப்படம் எடுத்தேன் என இளைஞர் தரப்பும் தெரிவிக்கவே.. இரு தரப்பையும் ஒன்றும் செய்ய முடியாமல்... அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சரி செய்யவே விரும்பிய காவலர், இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்...

அப்போது, போலீசாரின் கண்முன்னே மீண்டும் ஒரே இரு சக்கர வாகனத்தில் பெண்கள் மூவரும் ஏறி செல்ல முயன்றது போலீசாருக்கு கோபத்தை வரவைத்தது.

உடனடியாக போலீசார், அவர்களை வாகனத்திலிருந்து இறங்கி பைக்கை தள்ளிக்கொண்டே செல்லும் படி எச்சரிக்கவே, அவர்கள் கீழே இறங்கினர்...

இதையும், இளைஞர் வீடியோவாக பதிவு செய்தபோது, அருண்குமாரை நோக்கி தான் காவலரின் மகள் எனவும், உன்னை என்ன செய்யவேண்டும் என தனக்கு தெரியுமென மிரட்டல் தொனியில் பெண் ஒருவர் பேசி சென்றதாக கூறப்படுகிறது....

இந்நிலையில், தன்னை தாக்கிய பெண்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி சென்னை, அபிராமபுரம் காவல்நிலையத்தில் இளைஞர் புகாரளித்தார்.

இது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மூவரும் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததற்கு ஆயிரம் ரூபாய் அபராதமும், டிரிபிள்ஸ் சென்றதற்கு ஒரு ஆயிரம் என இரண்டாயிரம் ரூபாய் பணத்தை போலீசார் அபராதமாக விதித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்