ரோட்டில் தலையில் அடிபட்டு மெல்ல மெல்ல பிரிந்து கொண்டே இருந்த இளம் உயிர்.. கருணையே இல்லாமல் போனை திருடிய கொடூரம்... செத்தும் 12 பேரினுள் வாழப்போகும் அம்மா பிள்ளை

Update: 2023-04-28 09:19 GMT

இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த இளைஞரைக் காப்பாற்றாமல், அவரது செல்போனை திருடிச் சென்ற கொடூர கொள்ளையனால், மூளைச்சாவு அடைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவத்தின் சோகப் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

இயந்திர வாழ்க்கையில் மனிதநேயம் மறந்துபோனதற்கு எடுத்துக்காட்டாக நடந்துள்ளது தற்போதைய சம்பவம்... என்னதான் பொருள் மீது ஆசை இருந்தாலும், அதைவிட உயிர் முக்கியம் என்பதை கூட யோசிக்காத அளவிற்கு கொள்ளையனின் செயல் மனதை நோகடித்துள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் - ஜெயந்தி தம்பதியின் இளைய மகன் கார்த்திகேயன். பிசிஏ பட்டதாரியான கார்த்திகேயன், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தாயின் செல்லப்பிள்ளையான கார்த்திகேயனுக்கு, திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.

சேலையூர் கேம்ப் ரோடு பகுதியில் உள்ள தனது பெரியம்மா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று வீடு திரும்பிய கார்த்திகேயனுக்கு, அதுதான் கடைசி பயணமாக விதி முடிவு செய்துள்ளது ...

மகாலட்சுமி நகர் சிட்லபாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த கார்த்திகேயன், நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் அடிபட்ட நிலையில், ரத்தம் எதுவும் வராமல் உள் காயம் ஏற்பட்டுள்ளது.

தலையில் அடிபட்டதால் தட்டுதடுமாறி பக்கத்தில் இருந்த கடை அருகே அமர்ந்து, மயக்கத்தில் இருந்தபடி தனது உறவினருக்கு போன் செய்த கார்த்திகேயன், நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை செல்போனில் தொடர்புகொண்ட படி, இருப்பிடத்தை நோக்கி சென்றுள்ளனர். மயக்கத்தில் இருந்ததால், இருப்பிடத்தை சரியாக கார்த்திகேயன் கூற முடியாத நிலையில், திடீரென அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது.

மயக்கத்தில் இருந்த கார்த்திகேயனுக்கு உதவாமல், கொடூர மனம் படைத்த நபர் ஒருவர், செல்போனை திருடிச் சென்ற அந்த ஒரு வினாடியே, கார்த்திகேயனின் கடைசி தருணமாக மாறியது.

ஒரு கட்டத்தில் கார்த்திகேயனை தொடர்பு கொள்ள முடியால், இரவு முழுவதும் அலைந்து திரிந்த குடும்பத்தினருக்கு, இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பொழுது விடிந்து கடை திறக்க வந்த உரிமையாளர், கார்த்திகேயனின் நிலையைக் கண்டு, ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அங்கு பரிசோதித்தபோது, கார்த்திகேயனின் உயிர் ஏற்கனவே பிரிந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து வந்த பெற்றோர், மகனின் உடலைப் பார்த்து கதறி அழுதது, காண்போரை வேதனை அடைய வைத்தது.

மருத்துவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, 12 பேருக்கு உதவும் வகையில், மகனின் உடல் உறுப்பை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்