கண்ணீருடன் ஏரியில் உயிருக்கு போராடிய முதியவர்..! - மனித சங்கிலியாய் மாறி காப்பாற்றிய இளைஞர்கள்
சென்னை போரூர் ஏரியில் தவறி விழுந்து கரையைப் பிடித்தபடி மேலே வர முடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவரை இளைஞர்கள் சிலர் பத்திரமாக மீட்டனர்.
60 வயதான முத்து என்ற முதியவர், தண்ணீர் அருந்த போரூர் ஏரியில் இறங்கியபோது தவறி விழுந்துள்ளார்... ஏற்கனவே காலில் அடிபட்டு இருந்ததால், அவரால் கரையைக் கடந்து மேலே வர முடியாமல், கரையைப் பிடித்தபடி தண்ணீரில் கண்ணீருடன் தவித்து வந்தார். முதியவர் முத்துவின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்ற வாலிபர்கள் உடனடியாக வந்து முதியவரை மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். இளைஞர்கள் ஒருவர் பின் ஒருவராக நின்று மனித சங்கிலி போல் அமைத்து, முதியவருக்கு கரம் கொடுத்து அவரை ஏரியில் இருந்து பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்... தண்ணீரில் இருந்து மேலே வந்த அந்த முதியவர் தன்னைக் காப்பாற்றிய இளைஞர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்கள் மட்டும் தன்னைக் காப்பாற்றவில்லை என்றால் "தண்ணீரில் இறந்தே போயிருப்பேன்" என அவர் கண்ணீர் மல்க குறிப்பிட்டார். உயிரை பணயம் வைத்து உதவி புரிந்த அப்துல் ரஹீம், ரஞ்சித், முபாரக், விக்னேஷ் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தடுப்புகள் இல்லாததால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாகவும், ஏரியைச் சுற்றி தடுப்பு அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.