ஷேராக கொடுத்த பணம் காற்றில் போனது..கோபத்தில் சிறுவன் கடத்தல்..நெருங்கிய போலீஸ்...பயந்து போனவர் செய்த பகீர் காரியம்

Update: 2022-09-18 02:50 GMT

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி கவிதா. இவர்களின் 14 வயதான மகன் அஜய் பிரணவ், அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சிவகுமார் வேலை பார்த்து வந்த கட்டிட நிறுவனத்தின் உரிமையாளரான ராஜேஷ்குமார் 100 வீடுகள் கட்டி விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார். அப்போது அந்த திட்டத்தில் ராகேஷ் 36 லட்ச ரூபாய் பணத்தை தன் பங்காக கொடுத்துள்ளார்.

3 வருடங்கள் கடந்த போதிலும் எந்த வித பதிலும் இல்லாததால் சிவகுமாரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். பொதவாக நிலங்களை சிவக்குமார் தன் மனைவி கவிதா பெயரில் கட்டி வருவது தெரியவந்ததால் ராகேஷ் அதனை கேட்டுள்ளார்.

தான் கொடுத்த பணம், அல்லது அதற்கு ஈடாக நிலம் அல்லது வீட்டை கேட்கவே அதற்கு சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கட்டுமான நிறுவனத்தின் முதலாளியாக ராஜேஷ்குமார் இருந்தாலும் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் சிவக்குமார், கவிதா பெயரில் இருந்ததால் ராகேஷின் கோபம் அனைத்தும் இவர்கள் பக்கம் திரும்பியிருக்கிறது..

ஒரு கட்டத்தில் கொதித்துபோன ராகேஷ், சிவக்குமாரின் மகனான அஜய் பிரணவை கேரளாவிற்கு கடத்திச் சென்றார். மகனை காணவில்லை என சிவக்குமார் - கவிதா தம்பதியர் போலீசில் புகார் அளித்தனர். அப்போது சிறுவனை ராகேஷ் கடத்திச் சென்றது உறுதியான நிலையில் அவர் கேரளாவில் கொல்லத்தில் இருப்பதும் தெரியவந்தது.

போலீசார் தன்னை நெருங்கியதால் பயந்து போன ராகேஷ், தங்கியிருந்த இடத்திலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள போலீசாரின் உதவியோடு சிறுவன் அஜய் பிரணவ் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்...

36 லட்ச ரூபாய் பணத்துக்காக கடத்தலில் ஈடுபட்டு கடைசியில் போலீசுக்கு பயந்து ஒருவர் தன் உயிரை விட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்