தமிழகத்தை உலுக்கிய மெகா மோசடி - இறக்கும் முன் புட்டு புட்டு வைத்த இளைஞர்... சிக்கிய பகீர் கடிதம்.. சிக்கலில் நிறுவனம்

Update: 2023-05-03 07:08 GMT

ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்து தவித்து வந்த நபர், கடன் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

கொள்ளையடித்தவன் சுகபோகத்திலும், பணத்தை இழந்தவன் நரக வேதனையிலும் என்பது போல, ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்து, கடன் தொல்லையால் தவித்து வந்த நபர், தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சோக சம்பவம் தான் இது...

வேலூர் மாவட்டம் காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு 'இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ்'... அதாவது IFS என்ற பெயரில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வந்தது. தங்களிடம் முதலீடு செய்வோருக்கு 10 முதல் 30 சதவீதம் வரை மாதந்தோறும் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது.

இதனை நம்பிய பொதுமக்களோ, தாங்கள் உழைத்தும், சேமித்தும் வைத்த பணம் அனைத்தையும், கண் போன போக்கில், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பல ஆயிரம் பேரிடம் இருந்து சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை பணத்தை வசூலித்த ஐஎப்எஸ் நிறுவன நிர்வாகிகள், தாங்கள் எதிர்பார்த்த பணம் வந்தவுடன், முதலீடு செய்தவர்களுக்கு மொத்தமாக நாமத்தை போட்டுவிட்டு தலைமறைவாகினர்.

ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்து வந்த சகோதரர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேதநாராயணன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதால், அவர்களை 'தேடப்படும் குற்றவாளிகள்' என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோசடி செய்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் கொள்ளையர்கள் ஒரு பக்கம் இருக்க, பணத்தை இழந்து தவித்து வரும் நடுத்தர மக்களோ, நாளுக்கு நாள் கடன் சுமையால் நிற்கதியாகி போயிருப்பதுதான் நிதர்சனம்...

ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தில் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர், தற்போது கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், உறவினர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பணத்தை இழந்து தவிப்பவர்கள் மத்தியிலும், அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்