மனைவியை அடித்துக்கொன்ற லாரி டிரைவர்...தூக்கிட்டு இறந்ததாக நாடிகமாடிய பயங்கரம்....

Update: 2023-07-24 16:59 GMT

விருதுநகர் - பனைக்குடி

மனைவியை அடித்துக்கொன்ற லாரி டிரைவர்...

தூக்கிட்டு இறந்ததாக நாடிகமாடிய பயங்கரம்....

குழந்தை இன்மை... கள்ளக்காதல்...

சந்தேகத்தில் மனைவி கொடூர கொலை...

மனைவிய கொன்னுட்டு தற்கொல நாடகமாடி இருக்காரு இங்க ஒரு கணவன். குழந்தை இன்மை...ஒப்பனை...கள்ளக்காதல்..சந்தேகம்னு பகீர் கிளப்புது இந்த கத...


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அடுத்துள்ளது நாலூர் விலக்கு கிராமம்

உற்றார் உறவினர்களின் ஒப்பாரி சத்தத்தில் அன்று கிராமமே நடுநடுங்கி கிடந்தது.

வாழையடி வாழையாய் வாழ வேண்டிய மகளை வாய்காட்டி பிணமாக பார்த்ததன் ஆதங்கம் தான் அத்தனையும்.

கண்மூடிய பெண்ணின், உடலை சேலை கொண்டு மூடி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

யார் இந்த பெண்....? நடந்தது கொலையா...? தற்கொலையா...? என்று அறிந்து கொள்ள செய்தியாளர் திருச்சுழி அருண்குமாருடன் பனைக்குடிக்கு விரைந்தோம்.

இறந்து போனவர் அமைதியின் உறைவிடமாக திகழும் இந்த பனைக்குடி கிராமத்தை சேர்ந்த முத்துவள்ளி.24 வயதாகும் இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த பழனி என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது.

பழனி ஒரு லாரி டிரைவர்.தம்பதியினர் இருவரும் கடந்த சில மாதங்களாக அவனியாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் 30 ஆம் தேதி முத்துவள்ளி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாய் வீட்டிற்கு செய்தி வந்திருக்கிறது.

உடனே அலறி அடித்து ஓடிய உறவினர்கள், முத்துவள்ளியின் சடலத்தை கட்டித்தழுவி அழுது புலம்பி இருக்கிறார்கள்.அப்போது தான் அவர்களுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.

முத்துவள்ளியின் கழுத்திலும், உடலிலும் இருந்த காயங்கள் நடந்திருப்பது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகித்து, உடனே அ.முக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.

சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார், உறவினர்களிடம் விசாரனை நடத்தி இருக்கிறார்கள். முத்துவள்ளியின் கணவர் பழனியிடமும் விசாரனை வளையம் விரிந்திருக்கிறது. அப்போது தான் கணவனே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. அதற்கு காரணம் சந்தேகம் என்னும் சாத்தான்.

ஆம்....திருமணமாகி 5 வருடங்கள் கடந்த போதிலும் முத்துவள்ளி- பழனி தம்பதிக்கு குழந்தை இல்லை. இதற்காக அவர்கள் பார்க்காத வைத்தியம் இல்லை...வேண்டாத சாமி இல்லை... ஆனால் எந்த பயனும் இல்லை....

இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை மூண்டுள்ளது. ஆத்திரத்தில் பழனி, முத்துவள்ளியை அடிப்பதும் உண்டு. அப்படி சண்டை ஏற்படும் போதெல்லாம் முத்துவள்ளி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு வந்து விடுவாராம்.

வருபவரை சமாதானம் செய்து கணவனுடன் சேர்ந்து வாழ அனுப்பி வைப்பது குடும்பத்தினரின் வழக்கம். அப்படித்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணவனோடு கோபித்து கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார் முத்துவள்ளி.ஆனால் இம்முறை வந்ததற்கான காரணம் பழனியின் சந்தேகம்.

அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூருக்கு செல்லும் பழனி, மனைவி உள்ளூரில் வேறு ஒருவருடன் பழக்கம் வைத்திருப்பதாக நினைத்து சந்தேகித்திருக்கிறார்.

இதனை மனைவியிடமே கேட்டு அடித்து உதைத்திருக்கிறார்.அந்த அடி தாங்க முடியாமல் தாய் வீட்டிற்கு வந்த முத்துவள்ளியை ஆசூவாசப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் அந்த பிரச்சனை ஓயவில்லை...அனுதினமும் யாருடன் பழகுகிறாய்,ஏன் நமக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கேள்வி கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார் பழனி.

சம்பவம் நடந்த அன்றும் சந்தேக சண்டை நடந்திருக்கிறது. மாறி மாறி இருவரும் செய்த வாதம் விவாதமாக மாறி இருக்கிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற பழனி, முத்துவள்ளியை அடித்தே கொலை செய்திருக்கிறார்.

கொலையை மறைக்க முத்துவள்ளியின் சடலத்தை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகமாடியது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.

சந்தேகம் ஒரு கொடிய மிருகம், அதற்கு பலியாகி முத்துவள்ளி போன்ற பல உயிர்கள் மயானத்தில் எரிந்து சாம்பாலாகி விடுகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்