தமிழக அடையாளத்தின் கடைசி கலைஞர்..கடைசி தமிழரும் இவர் தான்..! - உயிரை உருக்கி கரைய விடும் மாமன்னன்..!
பழங்காலத்து இசைக்கருவி கின்னாரத்தை இசைக்கும் கடைசி கலைஞர் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்...
ஏகாந்த நாதத்தால் நம்மை சிலிர்க்க செய்யும் இந்த பண்டைய இசைக்கருவிதான் கின்னாரம்... வீணையை போல் தோற்றம் அளிக்கும் கின்னாரம், கின்னார சுரைக்காயிலிருந்து உருவாக்கப்படுகிறது. இப்போது அழியும் இசைக்கருவியாக மாறிவரும் கின்னாரம் மொத்தமே 2 தான் உள்ளது என சொல்லப்படுகிறது.
அவை திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் அருகே நந்தவனத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரிடம் உள்ளது. நன்றாக விளைந்த சுரைக்காயை தேர்வு செய்து, அதில் மூங்கிலை சொருகி, நரம்பை இணைத்து கின்னாரத்தை உருவாக்குவதாக சொல்லும் அவர், சுரைக்காயே கலைநாதம் எழுப்புகிறது என்கிறார்.
அவர் வைத்திருக்கும் கின்னாரம் மட்டும் கடைசி இசைக்கருவி கிடையாது... அவர்தான் கடைசி கின்னாரம் இசைக்கலைஞரும் கூட... தந்தையிடம் கற்ற கலையின்படி கின்னாரம் தயாரித்து, கண்ணகி-கோவலன் கதையை கிராமம் கிராமமாக சென்று பாடலாக சொல்லி வருகிறார்.
14 வயது முதல் கின்னாரம் இசைக்க தொடங்கிய அருணாச்சலம், ஒரு மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டதாகவும் தனக்கு பிறகு கின்னாரம் இசைக்கருவியையும், இசையையும் காக்க யாரும் இல்லை என கவலை கொள்கிறார்.
இசைக்கருவியை காக்க சில கின்னார சுரைக்காய் விதைகளை பாதுகாத்து வைத்திருப்பதாக சொல்லும் அவர், யார் விரும்பி கருவியை இசைக்க கற்க விரும்பினாலும் சொல்லிக் கொடுப்பதாக தெரிவிக்கிறார்.
பழங்கால இசைக்கருவியான கின்னாரம் கருவியை எப்படியாவது காக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக இருக்கிறது.