காதல் மனைவியை கடத்திய கணவன்..?"மேலே உட்கார்ந்து என் வாயை மூடிட்டாங்க" கதறும் தாய்..மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது மகளை, அவரது கணவர் அடித்து சித்ரவதை செய்து கடத்தி சென்றதாக கூறி பெண்ணி தாய் புகாரளித்துள்ளார்.
மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஷ்வரி. இவரது தந்தை உயிரிழந்த நிலையில், ஆராயத்தெருவில் தாயுடன் வசித்து வந்த உமா மகேஸ்வரி, தன் தாயின் விருப்பத்திற்கு மாறாக, மாரிமுத்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் மயிலாடுதுறையில் தனியே வீடு எடுத்து தங்கியிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தன்னை கணவர் அடித்து சித்ரவதை செய்வதாக கூறி தாய் வீட்டில் தஞ்சமடைந்த உமா மகேஷ்வரியை, அவரது கணவர் கும்பலுடன் வந்து காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து உமா மகேஷ்வரியின் தாய் போலீசில் புகாரளித்த நிலையில், ஒரு மாத காலமாகியும் புகாரில் எந்தவொரு நடவடிக்கையும் இல்லையென கூறி கண்ணீர் விட்ட அவர், மாரிமுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்த செல்போன் ஆடியோவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.