சமூக ஆர்வலரின் மரணத்திற்கு விதை போட்ட கல்குவாரி...குரலை உசத்தியதால் நெரிக்கப்பட்ட குரல்வளை

Update: 2022-09-15 04:42 GMT

கரூர் மாவட்டம் தென்னிலை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்... விவசாயியான இவர் அந்த பகுதியில் நிலம் வைத்து விவசாயம் செய்து வந்தார். அப்போது அந்த நிலத்தின் அருகே செல்வகுமார் என்பவர் கல்குவாரி ஒன்றை நடத்தி வந்தார்.

இந்த கல்குவாரியால் தன்னுடைய விவசாயம் பாதிக்கப்படுகிறது என முதலில் எதிர்க்க ஆரம்பித்த ஜெகநாதன், ஒரு கட்டத்தில் அதற்கு எதிராக முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.

கல்குவாரியானது உரிமம் இன்றி செயல்பட்டதற்கான ஆதாரங்களை எல்லாம் சமர்ப்பித்து சமீபத்தில் அந்த குவாரியை மூடவைத்திருக்கிறார். இது தான் அவரின் மரணத்திற்கும் விதை போட்டிருக்கிறது...

கல்குவாரி தொழில் முடங்கிப் போனதால் கோபத்தில் இருந்த செல்வக்குமார், வாகனத்தை ஏற்றி ஜெகநாதனை கொலை செய்தார். விபத்து போல சித்தரிக்க திட்டமிட்டிருந்த போதிலும் கொலை என அம்பலத்திற்கு வந்து கல்குவாரி உரிமையாளர் செல்வக்குமார், வாகன ஓட்டுநர் சக்திவேல், கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே தங்களுக்கு உரிய நீதியும் இழப்பீடு வேண்டியும் ஜெகநாதன் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் முகிலனும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தன் கணவர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி ஜெகநாதனின் மனைவி ரேவதி ஆட்சியரிடம் மனு அளித்தார். ஆனால் கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டதால் மறு பிரேத செய்ய அனுமதி மறுத்த ஆட்சியர் பிரபுசங்கர், உடலை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தார். ஆனால் மிரட்டியே இந்த முடிவுக்கு தங்களை தள்ளியதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

உடலை பெற்றுக் கொள்ள நெருக்கடி ஒரு பக்கம், இறுதி சடங்கு செய்ய விடாமல் தடுத்ததாக கூறி மருத்துவமனை வளாகத்தில் அதாவது கணவரின் உடலை பெறுவதற்கு முன்பாக ரேவதி போலீசார் முன்பாக கதறி அழுத காட்சி பார்ப்போரை பதற வைத்தது...

சமூக ஆர்வலராக இருந்த கணவர், தன்னையும் பிள்ளைகளையும் சரிவர கவனிக்கவில்லை என்பதால் விரக்தியில் இருந்த ரேவதிக்கு இப்போது அவரின் மரணத்திற்கு பிறகும் இக்கட்டான சூழல்...

பிள்ளைகள் மீது பொய் வழக்கு போடுவோம் என்ற அச்சுறுத்தலுக்கு பயந்தே உடலை பெற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார் அவர்...

சம்பவம் நடந்த அன்றே கல்குவாரி உரிமையாளர்கள் தரப்பும் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தது. அதில் சமூக ஆர்வலர்கள் என்னும் பெயரில் சிலர் செய்யும் செயல்களால் தங்களால் குவாரி தொழிலை நிம்மதியாக செய்யமுடியவில்லை என்பது அவர்கள் தரப்பு கோரிக்கை...

கரூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் எத்தனை? உரிமத்துடன் இயங்குபவை எத்தனை? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில் ஜெகநாதனின் மரணம் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தீர்வை பெற்றுத் தருமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்