சாலையில் வாகனம் ஓட்டும் நபர்களை தலையில் தட்டி விட்டு ட்ரிபிள்ஸ் போன சிறுவர்கள்
சென்னை பெருநகர காவல் துறையின் அதிகாரப்பூர்வ சமூகவலைதள கணக்கு பக்கங்களில் பொதுமக்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு புகார் அளித்து வருகின்றனர், அந்த வகையில் கடந்த நான்காம் தேதி யூடியூப் சேனல் நடத்தி வரும் பெண் ஒருவர் கொடுங்கையூர் பகுதியில் எடுத்த வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று சிறுவர்கள், இரண்டு குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் பயணம் செய்ததோடு சாலையில் செல்லும் மற்ற இருசக்கர வாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை தட்டிவிட்டு அவர்களை தள்ளி விடுவது போலவும் சேட்டைகள் செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்த வீடியோ அடிப்படையில் போலீசார் புகார் அளித்த பெண்ணிடம் சம்பவம் நடைபெற்ற தேதி நேரம் உள்ளிட்ட தகவல்களைப் பெற்றுக் கொண்டு விசாரணையயை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் வீடியோவில் இருந்த இருசக்கர வாகனம் பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தன் ல் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. மேலும் இந்த வாகனம் கடந்த மாதம் திருடப்பட்டதாக அரங்கி மலை காவல் நிலையத்தில் நித்தியானந்தம் புகார் அளித்திருந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து பரங்கிமலை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸின் மேரி தலைமையிலான போலீசார் கொடுங்கையூர் பகுதிக்கு சென்று சுமார் 180-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த 15 வயது மற்றும் 16 வயதுடைய இரண்டு இளம் சிறார்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் பரங்கிமலை பகுதிக்கு ரயில் மூலமாக சென்று அங்கிருந்து இரு சக்கர வாகனத்தை திருடி வந்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்களுடன் இருந்த மற்றொரு சிறுவனிடம் திருமங்கலம் பகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் இருந்துள்ளது அதையும் கைப்பற்றி திருமங்கலம் போலீசாரிடம் ஆய்வாளர் ஜோஸ்லின் ஒப்படைத்தார். மேலும் இவர்கள் மீது கடையின் பூட்டை உடைத்து திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் இளம் சிறார்கள் என்பதால் மூன்று பேரையும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.