அதிரடி தீர்ப்பு கொடுத்த 3வது நீதிபதி..ஜூன் 14 டூ ஜூலை 14 வரை..செந்தில்பாலாஜி வழக்கில் நடந்தது என்ன?

Update: 2023-07-15 04:04 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்படியே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டப்படியே நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்த வழக்கு கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


ஜூன் 13 அன்று, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் 18 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டனர்.

ஜூன் 14 அதிகாலை 1.40 மணியளவில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். அப்போது, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.

ஜூன் 14 மாலை 3 மணியளவில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஜூன் 14 அன்று, சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி, அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி நீதிபதி சக்திவேல் விசாரிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென அவர் வழக்கிலிருந்து விலகினார்.

ஜூன் 16 அன்று, மேகலாவின் ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கப்பட்டது.

ஜூன் 22 அன்று, செந்தில் பாலாஜி மனைவி மனு மீது நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.

ஜூன் 27 அன்று இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

ஜூலை 4 அன்று, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் செந்தில்பாலாஜியை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்ட நிலையில்,

அதற்கு மாறாக மற்றொரு நீதிபதியான பரத சக்கரவர்த்தி, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி

ஜூலை 5 அன்று, இந்த வழக்கில் 3வது நீதிபதியாக சி.வி கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா உத்தரவிட்டார்.

ஜூலை 11 அன்று, மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் முன் முதல் நாள் விசாரணை துவங்கியது. செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகினர்.

ஜூலை 12 அன்று, மூன்றாவது நீதிபதி முன் இரண்டாவது நாள் விசாரணை நடந்தபோது, அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.

ஜூலை 14 அன்று, அமலாக்க துறை வாதத்துக்கு மேகலா தரப்பில் கபில் சிபல் பதில் வாதம் அளித்தது. அதனைத் தொடர்ந்து நீதிபதி கார்த்திகேயன் அமலாக்கத்துறைக்கு சாதகமாக அதிரடி தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டார்.

கைது சட்டப்படியானது நீதி மன்ற காவல் சட்டப்படியானது என கூறி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார் நீதிபதி

Tags:    

மேலும் செய்திகள்