ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், அரசியல் களத்தில் அனலை கூட்டியுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது மட்டுமே அவர்களுக்கு இருக்கும் ஒரே வேலை. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணியில் தான் லேசாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டுள்ளது.
நேற்று ஜிகே வாசனை அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போதே இரு தரப்புக்கும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அது இன்று காலையில் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளிவந்தது. ஆனால் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான பாஜகவின் நிலைப்பாடு தான் என்னவென்று தெரியாமல் இருந்தது. குறிப்பாக, இரு தரப்புக்கும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதேபோல அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தேர்தல் தேதி அறிவித்தபோதே முதல் ஆளாக தேர்தல் பணிக்குழுவை நியமித்தார். இது பாஜகவும் போட்டியிட மறைமுகமாக விருப்பம் தெரிவித்ததற்கான அறிகுறி என அரசியல் வட்டாரங்களில் சொல்லப்பட்டது.
இந்நிலையில் கடலூரில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ஹெச்.ராஜா, நடிகை நமீதா, கங்கை அமரன், சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதிமுக போட்டியிடுவதில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு ராமலிங்கம், "நாங்கள் இன்னும் முடிவை சொல்லவில்லையே" என கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.