நிதி ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார்நிலை குறியீடு பட்டியலில் கடலோர மாநிலங்களில், குஜராத் மற்றும் மும்பை ஆகிய போட்டி மாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏற்றுமதி தயார்நிலை குறியீடு என்பது மாநிலங்களின் ஏற்றுமதி திறன் மற்றும், செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றுமதிக்கான அதன் தயார்நிலையை மதிப்பிடுவதாகும்.
மாநிலங்களில் ஏற்றுமதி சார்ந்து ஏற்படும் சவால்கள், அரசு கொள்கைகளின் செயல்திறன் மேம்படுத்துதல், ஒழுங்குமுறை கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு தீர்மானிக்கப்படுகிறது.
ஏற்றுமதிக்கு ஏற்ப தகுதியுடன் தயார் நிலையில் இருக்கும் மாநிலத்தை சுட்டிக்காட்டுவதே இந்த தயார் நிலை குறியீடு. இந்த பட்டியல் வெளியிடுவதன் மூலம் மாநிலங்களுக்கு மத்தியில் போட்டித்தன்மையை ஊக்குவிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியை நோக்கி மாநிலங்களை வளர வைக்கும
கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்த ஏற்றுமதி தயார்நிலை குறியீடு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு வருகிறது.
அதில் 2 ஆண்டுகளாக கடலோர மாநிலங்களில், குஜராத் முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு 80.89 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து 78.20 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் மகராஷ்ட்ராவும், 76.36 புள்ளிகளுடன் கர்நாடகம் 3ம் இடத்திலும் உள்ளது. தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த குஜராத், 73.33 புள்ளிகளுடன் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் ஏற்றுமதியில் அதிக பங்கு வகிப்பது குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் தான்.
முதலிடம் பிடித்துள்ள தமிழகத்தின் முதல் மூன்று ஏற்றுமதி மாவட்டங்களாக காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருப்பூர் ஆகியவை உள்ளது.
பட்டு மற்றும் அது சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் முன்னிலை வகிக்கிறது. பெட்ரோலிய பொருட்கள், பொறியியல் பொருட்கள் மருந்து பொருட்கள் ஆகியவை சென்னையின் முதன்மை ஏற்றுமதிகளாக உள்ளன.
திருப்பூரில் மூலப்பொருள் ஏற்றுமதி, பருத்தி பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதி முக்கியத்துவம் வகிக்கிறது.
ஏற்றுமதி தயார்நிலை நிர்ணயிப்பதில் முக்கிய 4 தூண்களாக கொள்கை, வணிக சூழல் அமைப்பு, ஏற்றுமதி சுற்றுச்சூழல், ஏற்றுமதி செயல்திறன் ஆகியவை திகழ்கிறது.,
தமிழ்நாடு திறம்பட செயல்படுவதை குறிப்பிடும்படி, மாவட்ட அளவிலான ஏற்றுமதி திட்டம், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் கொள்கைகளின் அடிப்படையிலான கொள்கையின் கீழ் 97.21 புள்ளி பெற்றுள்ளது.
ஆதரவான உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்புடன் நடைமுறையில் உள்ள வணிக சூழலை மதிப்பிடும் வணிக சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ், தமிழகம் 88.84 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ஏற்றுமதியாளர்களுக்கான வர்த்தக ஆதரவுடன் ஏற்றுமதி தொடர்பான உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தியதற்காக, ஏற்றுமதி சுற்றுச்சூழல் அமைப்பில் தமிழகத்தின் மதிப்பெண் 73.68 ஆக இருந்தது.
ஏற்றுமதி செயல்திறனில் 63.34 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது மேலும் இதற்கு வலு சேர்க்கும் என்றே கருதப்படுகிறது.