பொய் செய்திகள்,தவறான தகவல்கள் பரவல் - 23.87 லட்சம் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்..!
தகவல் தொழில்நுட்ப விதிமீறல்களுக்காக, இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 23 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியை 2 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் வெறுப்புணா்வை தூண்டும் பேச்சுகள், தவறான தகவல்கள், பொய் செய்திகள் வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கடுமையான விதிமுறைகள் மத்திய அரசால் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டன.
அதன்படி, கடந்த ஜூலை மாதத்தில் விதிமீறல்களுக்காக 23 லட்சத்து 87 ஆயிரம் இந்திய வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த ஜூன் மாதம் 22 லட்சம் கணக்குகளும், மே மாதம் 19 லட்சம் கணக்குகளும், ஏப்ரலில் 16 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.