சித்தப்பாவுக்கு மகனின் பச்சை துரோகம்.. வாரிசு சண்டையில் சீரழியும் NCP.. பவார்ஸின் பவர் "மாமன்னன்" கையில்
தேசியவாத காங்கிரசிலிருந்து பிரிர்ந்து சென்ற மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் 8 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சரத் பவார் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளார். அங்குள்ள அரசியல் சூழலை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அரங்கேறிவரும் அதிரடி நிகழ்வுகள், ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் மகராஷ்டிரா பக்கம் திருப்பியுள்ளது.
சொந்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டு துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் அடுத்த டார்கெட், தேசிய வாத காங்கிரஸ் கட்சியையும், சின்னத்தையும் தன் வசம் கொண்டு வருவதே.
அஜித் பவாரின் இந்த முயற்சியை முறியடிக்க, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தீவிரம் காட்டி வருகிறார்.
கட்சியை விட்டு வெளியேறி தற்போது துணை முதல்வராக உள்ள அஜித் பவார் மற்றும் 8 அமைச்சர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என மகாராஷ்ட்ரா சபாநாயகர் ராகுல் நர்வேகரிடம் மனு அளித்துள்ளார்.
தகுதிநீக்கம் விவகாரம் ராகுல் நர்வேகரிடம் வருவது இது முதல்முறையல்ல...ஏற்கனவே பிளவுப்பட்டு வந்த சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கையை கையாண்டவரும் இவரே...
தற்போது வரை அஜித் பவார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவி பறிப்பு விவகாரத்தில், அஜித் பவாருக்கு ஆதரவான சூழலே நிலவுகிறது. ராகுல் நர்வேகர் பாஜக எம்.எல்.ஏ என்பதால் அஜித் பவாருக்கு எதிராக நடவடிக்கை இருக்காது என்றே கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தகுதிநீக்க விவகாரம் குறித்து நீதிமன்றம் தலையிடாதவாறு தனது முடிவை சபாநாயகர் ராகுல் நர்வேகர் தள்ளிப் போட முடியும். இதனால் எந்த வித தகுதிநீக்க நடவடிக்கைக்கும் ஆளாகாமல் அஜித் பவாரும், 8 அமைச்சர்களும் தங்கள் பதவியை தொடர முடியும்.
இருப்பினும் ஒரு சபாநாயகர் தகுதிநீக்க நடவடிக்கை குறித்த முடிவில் குறிப்பிட்ட காலத்தை தாண்டி காலதாமதம் செய்தால், உயர்நீதிமன்றமே மறு ஆய்வு செய்ய முன் வரும் நிலையும் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
அதே போல், கட்சித்தாவலில் ஈடுபட்டவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பான மனுக்களை நிலுவையில் வைத்தே பலரும் பதவி வகித்துள்ளனர்.
ஒருவேளை அஜித் பவார் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை என்றால் அவர் தனது ஆதரவாளர்களுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமைகோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதே அவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இருக்கும்.
தற்போது வரை தனக்கு ஆதரவாக 40 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக அஜித் பவார் கூறி வரும் நிலையில், பெரும்பான்மையான ஆதரவு உள்ள தரப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் உரிமைகோர முடியும்.
இதற்கு முன்னர் சிவசேனா, மற்றும் தமிழகத்தின் அதிமுக பிளவுப்பட்ட போது பெரும்பான்மையான ஆதரவு கொண்டிருந்த தரப்புக்கே கட்சியும், சின்னமும் சென்றடைந்தது.
இந்த சவாலான சூழ்நிலையை, சரத் பவார் தனது அரசியல் முதிர்ச்சியை வைத்து முறியடிப்பாரா? அல்லது பவரை பறிகொடுப்பாரா? என பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.