நகைக்கடையில் வெல்டிங் வைத்து உடைத்து கொள்ளை.. | கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
திருக்கோவிலூர் நகரப்பகுதியில் நகைக்கடையின் மேல்தள இரும்பு கதவை வெல்டு வைத்து நகை திருட்டு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வடக்கு வீதியில் நித்தேஷ் வயது 40 என்பவருக்கு சொந்தமான பாபுலால் ஜுவல்லரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது நகைகளை காட்சிப்படுத்தும் இடங்களில் வைத்திருந்த நகைகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் உள்ள முதல் தளத்தில் இயங்கும் வெள்ளிப் பிரிவில் அதிகளவில் வெள்ளி பொருட்கள் காணாமல் போயிருந்ததும் தெரிய வந்தது. மேலும், மேல் தளத்தில் சென்று பார்த்த போது அங்கிருந்த வலிமையான
இரும்பு கதவை கேஸ்வெல்ட் வைத்து உடைத்திருப்பதும், அந்த உபகரணங்களை அங்கேயே வைத்து சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில், சம்பவத்திற்கு விரைந்து வந்த திருக்கோவிலூர் போலீசார், சம்பவ இடத்தினை பார்வையிட்டு, நகை கடை உரிமையாளரிடம் விசாரித்தனர். விசாரணையில், முதற்கட்டமாக
1 கிலோ தங்க நகைகளும், 3 கிலோ வெள்ளி பொருட்களும் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மற்றும் வணிக வளாகங்கள் அதிகம் உள்ள பகுதியில் இது போன்ற ஹைடெக் திருட்டு நடைபெற்றுள்ளது இப்பகுதி வணிகர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.