ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும் 'அறநெறி போலீஸ்' பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில், கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற இளம்பெண்ணை, அறநெறி போலீசார் கைது செய்தனர். அவர்கள் கடுமையாக தாக்கியதில், மாஷா அமினி உயிரிழந்த நிலையில், அரசுக்கு எதிராக பெண்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். இதனை ஒடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகளில், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இருப்பினும், இரண்டு மாதங்களாக போராட்டம் ஓயாத நிலையில், இஸ்லாமிய மத சட்டங்கள் சரியாக பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தும், அறநெறி போலீஸ் பிரிவை கலைத்துள்ளதாக ஈரான் அரசு இன்று அறிவித்துள்ளது. இது போராட்டக்காரர்களின் முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.