"அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை" தோனி எனும் Real ராக்கி பாய்..ICT-ஐ இன்றும் ஆளும் மந்திர சொல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் பிறந்த தினம் இன்று... ரசிகர்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாய் திகழும் தோனி குறித்து ஒரு செய்தித் தொகுப்பு...
பீகாரில் இருந்து பிரிந்த சிறிய நகரம் ராஞ்சி... அங்கிருந்து கிரிக்கெட் களம் கண்ட ஒருவர் பெருங்கனவுகளை நனவாக்கினார். யாருக்கு அப்போது தெரிந்திருக்கும்?, சின்னஞ்சிறு நகரத்திலிருந்து புறப்பட்ட அந்த நபர்தான், கிரிக்கெட் உலகையே உற்றுநோக்க வைக்கப்போகிறார் என்று..
கோடானு கோடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவுகளை நனவாக்கிய பெயர்... தசாப்தம் தாண்டி சர்வதேச கிரிக்கெட் அரங்கை ஆட்சி செய்த பெயர்... சரிவை சந்தித்த இந்திய அணிக்கு சரித்திர வெற்றிகளை தேடித்தந்த பெயர்... ராஞ்சி எனும் சிறுநகரத்தில் இருந்து புறப்பட்டு, கிரிக்கெட் உலகில் தோனி நிகழ்த்திய சாதனைகள் பிரமிப்பின் உச்சம்....
2007ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் தோல்விக்கு தோனிதான் காரணம் என கருதிய ரசிகர்கள், அவர் வீட்டின் மீது கற்களை வீசினர். வெறுப்பில் உருவ பொம்மையைக்கூட கொளுத்தினர்.
ஆனால், அதற்கெல்லாம் கலங்கிவிடாமல் அடுத்த சில மாதங்களிலேயே டி20 உலகக் கோப்பையை வென்று தந்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு புத்துயிர்க் கொடுத்த மாயாஜால மனிதன்தான் மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பிறகு, வெற்றிகள் விஸ்தரித்தன. கோப்பைகள் குவியத் தொடங்கின. 2007ல் டி20 உலகக்கோப்பை, 2011ல் உலகக்கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை, ஐ.பி.எல். கோப்பை, சாம்பியன்ஸ் லீக் கோப்பை, பார்டர்-கவாஸ்கர் டிராபி என வென்று கேப்டன்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் தோனி...
கேப்டன் கூலாக மட்டும் இல்லாமல், மின்னல் வேக விக்கெட் கீப்பராகவும், திகழ்ந்தவர் தோனி. அவரது விக்கெட் கீப்பிங் திறமைகள் வியப்பூட்டுபவை. கோட்டை, மில்லி மீட்டர் அளவு தாண்டினாலும் எதிரணி பேட்டர்கள் காலிதான்.
ஆட்டத்தின் சூழலை கணிப்பதில் தோனிக்கு நிகர் தோனிதான்... போட்டியை ஆழமாகக் கொண்டு செல்வதில் தோனி ஒரு பல்கலைக்கழகம். துளியும் பதற்றம் இல்லாமல், எவ்வித சலனமும் இல்லாமல், இரைக்காக காத்திருக்கும் வேங்கைபோல், சரியான சமயத்தில் இலக்கை எட்டிப் பிடிக்கும் தோனியின் அணுகுமுறை, ரசிகர்களின் நினைவிலிருந்து நீங்காது.
முடிவுகளை விட செயல்கள்தான் முக்கியமானவை என்பது தோனியின் வழக்கம்... அவரது செயல்கள்தான் இந்திய அணியை செதுக்கி பல்வேறு உயரங்களை தொட வைத்தன. சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அவுட்டில் ஆரம்பித்த தோனியின் பயணம், ரன் அவுட்டில்தான் முடிந்தது. ஆனால், இதற்கு இடைப்பட்ட காலம் ஒரு சகாப்தம்...
இன்று தனது 42வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார் தோனி.. 5வது முறையாக சமீபத்தில்தான் ஐபிஎல் கோப்பையை வென்றார். அப்போதே ஓய்வை அறிவிக்க சிறந்த தருணம் என்றாலும், ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு முறை விளையாட முயற்சிப்பேன் எனக் கூறியுள்ளார் தோனி...
ஆம் ... அடுத்த ஐபிஎல் தொடரில் கடைசி முறையாக சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கலாம். இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் 15க்கும் மேற்பட்ட ரன்கள் வெற்றிக்கு தேவைப்படலாம்... களத்தில் தோனியே கூட நிற்கலாம்.. அப்போதும் கோடிக்கணக்கான ரசிகர்கள், தோனி ஃபினிஷ் செய்து, கோப்பையை வென்று தருவார் என்ற ஆழமான நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்.. ஆம்.... அந்த நம்பிக்கைதான், மகேந்திர சிங் தோனி...