சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து வரி உயர்வு தொடர்பான அரசாணை மற்றும் தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், சொத்து வரி உயர்வு தொடர்பாக மாநகராட்சி தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, அரசு தீர்மானிக்க முடியாது என வாதிடப்பட்டது. அதே சமயம், வரியை உயர்த்துவதற்கான அவசியங்கள் குறித்து, அரசுத் தரப்பில் ஆதாரங்களுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நாட்டின் பொருளாதார நலனுக்காக நிதிக்குழு அளித்த பரிந்துரைப்படி சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்ததில் எந்த தவறும் இல்லை எனக் கூறினார். சொத்து வரி உயர்த்துவது தொடர்பான அரசாணையும், மாநகராட்சி தீர்மானங்களும் செல்லும் என்றும் அவர் தீர்ப்பளித்தார்.